சென்னை:முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின், 4ஆம் ஆண்டு நினைவஞ்சலி குறித்து, அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த 2016 டிசம்பர், 5ஆம் தேதி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா நம்மை எல்லாம் விட்டு பிரிந்து சென்றார்.
புரட்சிகரமான திட்டங்களால் தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களையும் எழுச்சியையும் ஏற்படுத்தி நாட்டு மக்களுக்காக உழைத்த அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது, கழகத்தினரின் கடமை.
புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு நாளான டிச., 5ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.45 மணியளவில், மெரினாவில் உள்ள அன்னாரது நினைவிடத்தில், கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்கள்.
தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக, பொது நிகழ்ச்சிகளில், 200 பேருக்கு மேற்படாத வகையில் மக்கள் கலந்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ள நிலையில், நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தும், போதுமான இடைவெளியை கடைபிடித்தும், முககவசம் அணிந்து தற்பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து பங்குபெற வேண்டும்.
மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு, மாநகராட்சி பகுதி, வட்ட அளவில் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் நிர்வாகிகள், கழகத் தோழர்கள், அந்தந்த பகுதிகளில் அஞ்சலி செலுத்த வேண்டும்.
அதேபோல், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா கேரளா அந்தமான் உள்ளிட்ட பிறமாநிலங்களில், ஜெயலலிதாவின் உருவப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :வரும் 7ஆம் தேதி திருச்செந்தூரில் வேல் யாத்திரை நிறைவு விழா - எல்.முருகன் பேட்டி!