பொங்கல் பரிசுக்கான டோக்கனில் அதிமுக கட்சி சின்னம், தலைவர்களின் படங்களை நீக்கக்கோரி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் பொங்கல் பரிசு தொகைக்கான டோக்கனில் அதிமுக தலைவர்களின் படம், சின்னம் இடம்பெறாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. இதைப் பதிவு செய்த உயர் நீதிமன்றம் இவ்வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.
பொங்கல் பரிசு தொகையாக அரிசி அட்டைத்தாரர்களுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இன்று (ஜனவரி 4) முதல் பரிசு தொகை பெறுவதற்கான டோக்கன்கள் வழங்கும் பணிகள் தற்போது நடைபெறுகிறது. இந்த டோக்கனில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களின் படங்கள், அதிமுக கட்சியின் சின்னம் இடம் பெற்றுள்ளது என்றும் அதிமுகவினர், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக திமுக சார்பில் தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையரிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளிக்கப்பட்டது.
மேலும், இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தார். அதில், "மக்கள் வரிப்பணத்த்தில் அரசு சார்பில் செயல்படுத்தப்படும் இந்த பொங்கல் பரிசு தொகை திட்டத்தில் வழங்கப்படும் டோக்கன் மூலமாக அதிமுக கட்சியினர் சுய விளம்பரம் தேடி கொள்வது தேர்தல் ஆணைய அறிவிப்பாணைக்கு எதிரானது. மேலும், இந்த டோக்கன்கள் ஆளும் கட்சியினர் மூலமாக வழங்கப்படுவதால் அனைத்து பயனாளிகளுக்கும் இந்த பரிசு தொகை போய் சேராது எனவும்" புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஜன.04) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் அரசியல் கட்சி தலைவர்கள், சின்னம் பொறிக்கப்படாது என சுற்றறிக்கையை நீதிமன்றத்தில் ஏற்கனவே சமர்பிக்கப்பட்டு விட்டது என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், பொங்கல் பரிசு தொகைக்கான டோக்கனில் அதிமுக தலைவர்களின் படம், கட்சியின் சின்னம் இடம்பெற கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.