வயது முதிர்வு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாகக் கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இன்று மாலை 3:42 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 80.
அதிமுகவின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான மதுசூதனன், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில், 1991 முதல் 96ஆம் ஆண்டு வரை கைத்தறித்துறை அமைச்சராக இருந்துள்ளார். இவரை, ஜெயலலிதா கட்சியின் அவைத் தலைவராகவும் நியமித்திருந்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, சட்டப்பேரவை உறுப்பினர் ஓ. பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் தொடங்கியபோது, அவருக்கு முதலில் ஆதரவளித்த அதிமுக தலைவர்களில் முக்கியமானவர் மதுசூதனன் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அவர் சிகிச்சையில் இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் நலம் விசாரித்தனர்.
தற்போது அவரது உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து கொண்டு சென்று அவருடைய தண்டையார்பேட்டை இல்லத்தில் வைக்கப்பட உள்ளதாகவும், நாளை அவரது பூதவுடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு தகனம் செய்யப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.