அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், மூச்சுத்திணறல் காரணமாக கடந்த ஜூலை 20ஆம் தேதி முதல், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று பிற்பகல் 3:42 மணிக்கு, சிகிச்சை பலனளிக்காமல் மதுசூதனன் காலமானார் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. அவருக்கு வயது 80.
கடந்த காலத்தில் எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு, அதிமுக ஜானகி, ஜெயலலிதா அணி என இரு வேறு அணிகளாக பிரிந்து கிடந்தது. அப்போது நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்.கே நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் மதுசூதனன்.
கடந்த 1991ஆம் ஆண்டு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில், கைத்தறித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் மதுசூதனன். மேலும், ஜெயலலிதா இவரை அதிமுக அவைத் தலைவராகவும் நியமித்திருந்தார். மதுசூதனன் பிப்ரவரி 5, 2007 ஆம் ஆண்டில் இருந்து, தற்போது வரை என சுமார் 15 ஆண்டு காலம் அதிமுகவின் அவைத்தலைவராக பதவி வகித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவு அளித்த மதுசூதனன்
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சட்டப்பேரவை உறுப்பினர் ஓ. பன்னீர்செல்வம், மெரினாவில் அமர்ந்து தர்ம யுத்தம் நடத்தினார். அப்போது அவருக்கு முதலில் ஆதரவளித்த அதிமுக தலைவர்களில் முக்கியமானவர் மதுசூதனன். பின்னர், அதிமுகவில் நிலவி வந்த குழப்பம் முடிவடைந்து, இ பி எஸ் - ஓ பி எஸ் என இரட்டை தலைமையின் கீழ் அதிமுக வந்தது.
அப்போது அதிமுகவில் அவைத்தலைவர் தலைமையில், பல்வேறு நிகழ்வுகள் நடந்திருந்தாலும், அவைத்தலைவர் பொறுப்பு பெயரளவில் மட்டுமே செயல்பட்டு வந்தது. வயது மூப்பு காரணமாக, தான் உயிருடன் இருக்கும் வரை அவைத்தலைவராக இருப்பேன் என ஒரு நிகழ்வில் தெரிவித்திருந்தார் மதுசூதனன்.
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக இருமுறை என, கடந்த 2011-2020 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சி செய்தது. அதன் பின்னர் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியது. இதில் ஆர்.கே நகரில் போட்டியிட்ட மதுசூதனன் தோல்வியடைந்தார்.
மதுசூதனனின் குற்றப்பின்னணிகள்?
அதிமுகவில் ஜெயலலிதா தலைமைக்குப் பிறகு, சென்னையில் அக்கட்சியினர் அரங்கேற்றிய அத்தனை அராஜகங்களிலும் ஈடுபட்டவர் மதுசூதனன் என்று கூறப்பட்டது. குறிப்பாக தமிழ்நாட்டுக்கே ஆசிட் வீச்சு கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியவர் என்கிற கடந்த கால வரலாறும் மதுசூதனனுக்கு உண்டு என்பார்கள். ஐ.ஏ.எஸ் சந்திரலேகா மீது ஆசிட் வீசப்பட்ட வழக்கில் இவர் கைது செய்யப்பட்டார்.
தராசு ஊழியர் படுகொலை, ப.சிதம்பரம் வாகனம் மீது தாக்குதல், அண்ணா பல்கலை. துணை வேந்தர் முனைவர் அனந்தகிருஷ்ணன் வீடு தாக்குதல், வக்கீல் விஜயன் மீதான கொலைவெறி தாக்குதல், மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரத்தின் மீதான கொலைவெறித் தாக்குதல் ஆகியவையெல்லாம், 1991-1996 ஆம் ஆண்டு ஜெ. ஆட்சிக் காலத்து அராஜகத்தின் உச்சங்கள்.