சென்னை:ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அதிமுக இரண்டு அணிகளாக உடைந்து, ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்ட நிலையில், கட்சி தங்களுக்குதான் சொந்தம் என இபிஎஸ், ஓபிஎஸ் என இருதரப்பினரும் மோதி கொண்டு வருகின்றனர். அடுத்தகட்டமாக 'இரட்டை இலை சின்னம்' யாருக்கு? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுமாதிரியான விவகாரங்களால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா? அதிமுகவில் அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை விரிவாக காண்போம்.
இரட்டை இலை சின்னம் எத்தனை முறை முடக்கப்பட்டது?:இதுவரை இரண்டு முறை அதிமுகவின் சின்னம் முடக்கப்பட்டுள்ளது. முதலில் 1987 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் மரணம் அடைந்ததால் ஜெயலலிதாவின் தனி அரசியல் தீவிரமானது. மேலும் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அணி, ஜெயலலிதா அணி (ஜா.ஜெ அணிகள்) என இரு கோஷ்டிகளாகப் பிரிந்தது அதிமுக. அதனைத் தொடர்ந்து முதலமைச்சரான ஜானகி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், பெரும் ரகளையாகி, ஆட்சி கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது. அதிமுக இரண்டுபட்டதால், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.
இரண்டாவதாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, 2017 ஆம் ஆண்டு சசிகலா-ஓபிஎஸ் என்ற இருவேறு அணிகளால் இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கத்துக்கு ஆளானது. ஒரு பக்கம் ஓபிஎஸ் அணியினர் சின்னமும், கட்சியும் எங்களுக்குத்தான் எனக் கூறிய நிலையில், மற்றொரு பக்கம் சசிகலா தரப்பு உரிமை கொண்டாடியதால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.
இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்படுமா?: தற்போது தொண்டர்களின் உதவியோடு இரட்டை இலை சின்னத்தை தங்களது பக்கம் கொண்டுவர நீதிமன்றத்தை நாடுவோம் என ஓபிஎஸ் கூறியுள்ள நிலையில், தேர்தல் வரும் போது இரு அணிகளாக அதிமுக பிரிந்து நின்றால் கட்சியின் சின்னமான இரட்டை இலை முடக்கப்பட வாய்ப்புள்ளது என கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.