இராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை, தொகுதிப் பங்கீடு ஆகியவற்றை இறுதி செய்வது குறித்து, மாவட்டச் செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த 8240 பேரிடம் ஒரே கட்டமாக நேர்காணல் நடத்தப்பட்டது. இதனையடுத்து, முதற்கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் எடப்பாடி தொகுதியில் மீண்டும் முதலமைச்சர் பழனிசாமியும், போடி தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் என 6 பேர் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இன்றைய கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்களிடம் தனித்தனியே ஆலோசனை கேட்கப்பட்டு, ஆலோசனையின் முடிவில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை, அதிமுக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதிமுகவின் வரைவு தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகியோரிடம் தேர்தல் அறிக்கை குழு இன்று வழங்கவுள்ளது.
மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக முக்கிய ஆலோசனை! அதோடு தமிழ் மாநில காங்கிரஸ்க்கான தொகுதிப் பங்கீடு குறித்தும் இன்று அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு பாஜகவுக்கு 20 சட்டமன்ற தொகுதிகளும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியும் ஒதுக்கப்பட்டது. மற்ற கட்சிகளுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது.
இதையும் படிங்க: முதலமைச்சர் வேட்பாளர் எங்களுக்கு ஸ்டாலின்! - அதிமுக அணியில் யார்? - அழகிரி கேள்வி!