சென்னை:அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கு டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. வானகரத்திலுள்ள தனியார் மண்டபத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடந்தபோது, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது.
தொடர்ந்து, போலீசார் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டபோது, அதிமுக அலுவலகத்திற்குள் தனது ஆதரவாளர்களுடன் வந்த ஓ.பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகத்தில் இருந்து கட்சி நிதி, வங்கி ஆவணங்கள், கணினி சிபியூ உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றார் என கூறப்பட்டது.
இச்சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான சி.வி சண்முகம், ஈபிஎஸ் ஆதரவாளரான ஆதிராஜாராம், உதவி ஆய்வாளர் காசுப்பாண்டி, ஓபிஎஸ் ஆதரவாளரான பாபு ஆகியோர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த 4 புகார்களின் அடிப்படையில் 4 தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.