சென்னை: மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர், அதிமுக கட்சியைத் தொடங்கி 49 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று(அக்.17) 50ஆவது ஆண்டு தொடங்குகிறது.
இதையொட்டி, அதிமுக சார்பில் பொன்விழா ஆண்டாக இந்தாண்டு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனால், கட்சி தொடங்கிய நாளான இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து, அதிமுககட்சிக் கொடியை ஏற்றிவைத்து, நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி, அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள அதிமுக பொன்விழா சிறப்பு மலரை ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட முன்னாள் அமைச்சர் பொன்னையன் பெற்றுக்கொண்டார்.