சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. இது, அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக் கூறி கட்சி உறுப்பினர்களான ராம்குமார், ஆதித்தன் ஆகிய இருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இதற்கு பதிலளித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்தனர். அதில், "மனுதாரர்கள் இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் அல்ல. இந்த வழக்கை தாக்கல் செய்ய அவர்களுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை.
அதிமுகவின் செயல்பாட்டை தடுத்து நிறுத்தும் நோக்கில், சில தனிநபர்களுக்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் வழங்கி 2017 செப்டம்பரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது.
2017க்கு பின் நடந்த தேர்தல்களில் கட்சியின் வேட்பாளர்களை அங்கீகரித்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்திட்டுள்ளோம். இரட்டை தலைமையை கட்சியினர் விரும்பவில்லை என எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளனர். இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி வேல்முருகன் வரும் ஏப்ரல் 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் முதல் வணிக நீதிமன்றம் - முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்