இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவப் படிப்புச் சேர்க்கைக்கான நீட் தேர்வை ரத்து செய்ய போராடிக் கொண்டிருக்கின்ற நிலைமையில், 2022-2023ஆம் கல்வி ஆண்டிலிருந்து மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு மாணவ, மாணவியர், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் இருக்கின்ற பல்வேறு இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கு 1.8 லட்சம் இருக்கைகள் நிரப்பப்படஉள்ளன.
அதற்கு ஏதுவாக, 2022-2023 ஆம் கல்வியாண்டிலிருந்து மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு, அதாவது Central University Entrance Test (CUET) நடத்தப்படும் என்றும், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத் தேர்வினை எழுதத் தகுதியுடையவர்கள் என்றும், பன்னிரெண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்ணிற்கு எந்தவிதமான முக்கியத்துவமும் தரப்படாது என்றும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் நடத்தப்படும் இந்தத் தேர்வுக்கு திமுக அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இருப்பினும் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கிவிட்டதாகவும், நுழைவுத் தேர்வுக்கு இந்த மாதம் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், இந்தத் தேர்வு தமிழ் மொழி உட்பட 13 மொழிகளில் கணினி வழியில் நடத்தப்படும் என்றும் செய்திகள் வந்துள்ளன.
இதிலிருந்து மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு மூலம்தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், வருங்காலங்களில் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் உள்ள இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற நிலை உருவாகக்கூடும்.