அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களின் கூட்டம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவின் செயல்பாடுகள், மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருகை, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுகவின் செயற்குழுக் கூட்டத்தில், 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், வழிகாட்டு குழு அமைக்கப்பட்டு மாவட்ட பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களின் கூட்டம் நடைபெறுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் பணிகளை துரிதப்படுத்துவது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்டவற்றை சரி பார்ப்பது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், சசிகலா விடுதலை குறித்தும் விவாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் நடத்த கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் குறித்தும், இடம், தேதி ஆகியவற்றை குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், பாண்டியராஜன், உதயகுமார், செல்லூர் ராஜு, தங்கமணி எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.