தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இந்தி மொழி விஷயத்திலும் திமுக இரட்டை வேடம் - ஓ.பன்னீர்செல்வம் - இந்தி மொழி விஷயத்திலும் இரட்டை வேடம் போடும் திமுக

இந்தி மொழி விஷயத்திலும் இரட்டை வேடம் போடும் திமுக அரசிற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

By

Published : Apr 17, 2022, 2:17 PM IST

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில், "தான், தனது, தமக்கு என்று இல்லாமல் தமிழ், தமிழ்நாடு, தமிழினம் என இமைப்பொழுதும் சோர்வின்றி உழைத்தவர் பேரறிஞர் அண்ணா. ஆனால், அதற்கு நேர்மாறான சூழ்நிலை தமிழ்நாட்டில் இன்று நிலவுகிறது.

தன்னலத்திற்காக மத்திய இளநிலை கல்விக் கழக அங்கீகாரம் பெற்ற பள்ளிகளை துவக்குவது அல்லது அதனை விலைக்கு வாங்குவது, ஆங்கிலப் பெயர்களை வியாபார நிறுவனங்களுக்கு வைப்பது, பிற மாநிலங்களில் வியாபார நிறுவனங்களை துவக்குவது என்ற வரிசையில் தற்போது முதலமைச்சரை பிரபலப்படுத்துவதற்காக இந்தி மொழியை திமுக அரசு பயன்படுத்தி வருவதாக செய்திகள் வந்துள்ளன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தேசியத் தலைவராக பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், குறிப்பாக வட மாநிலங்களில் அவர் புகழ் பரவ வேண்டும் என்பதற்காகவும் சில நடவடிக்கைகள் திமுகவால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் முதல் கட்டமாக தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110இன்கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகள் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டு தொல்லியல் துறை இணையதளத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

இந்தி மொழியில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு ஒன்றும் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது. ஒரு பக்கம் இந்தித் திணிப்பு என்று கூறி தமிழுக்கு போராடுவது போல் நடிப்பது, மறுபக்கம் இந்தியில் திமுக தலைவரை விளம்பரப்படுத்துவது என இரட்டை வேடம் போடுகிறது திமுக தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு பேரறிஞர் அண்ணா கூறிய இருமொழிக் கொள்கையில் ஒன்றான ஆங்கிலத்தை பயன்படுத்துவதற்குப் பதில் ஏன் மும்மொழிக் கொள்கையில் ஒன்றான இந்தியை திமுக தலைவர் பயன்படுத்துகிறார் என்று மக்கள் கேட்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

ஒருவேளை ஊருக்கு தான் உபதேசம் போலும்! திமுக அரசின் இந்த இரட்டை வேடத்திற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவின் இந்தச் செயலைப் பார்க்கும்போது, "பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி, பாமர மக்களை வலையினில் மாட்டி, இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, நம் நாட்டிலே" என்ற புரட்சித் தலைவரின் பாடல் வரிகள் தான் என் நினைவிற்கு வருகின்றன.

திமுகவின் செயல்பாடுகளைக் கண்டு மக்கள் பெருத்த ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த ஏமாற்றம், வருங்காலத்தில் தமிழ்நாட்டில் மிகப் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தமிழ் வாழ்கிறதா...கொல்லப்படுகிறதா... இயக்குநர் தங்கர் பச்சான் ஆதங்கம்!

ABOUT THE AUTHOR

...view details