சென்னை:இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டதோடு, ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நேர்மையான, தூய்மையான, வெளிப்படையான நிர்வாகம் நடக்கும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால், கடந்த ஒன்பது மாத கால திமுக ஆட்சியின் செயல்பாடுகளை உற்று நோக்கிப் பார்த்தால் வெளிப்படைத்தன்மை என்பது அறவே இல்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
உதாரணத்திற்கு 'நீட் தேர்வு ரத்து' என்ற வாக்குறுதியை எடுத்துக் கொள்வோம். "திமுக ஆட்சி அமையும்போது 'நீட்' தேர்வு ரத்துசெய்யப்படும். நீட் தேர்வினால் வாய்ப்பை இழந்தவர்களுக்குப் பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். இது உறுதி. எட்டு மாதங்கள் பொறுத்திருங்கள். கலங்காதிருங்கள். விடியல் பிறக்கும்" என்று தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் அறிக்கை விடுத்தவர் ஸ்டாலின்.
நீட் குறித்து குறைந்திருக்கும் திமுகவின் குரல்
இந்தச் செய்தி 2020 செப்டம்பர் 12 நாளிட்ட பத்திரிகைகளில் செய்தியாக வந்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலை முன்னிட்டு மக்களுக்குத் தேர்தல் வாக்குறுதிகளை திமுக அளித்தது. அதில், "கழக ஆட்சி அமைந்தவுடன் முதல் கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வை ரத்துசெய்யும் சட்டத்தை நிறைவேற்றிக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரால் விடுத்த அறிக்கையையும், 2021ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட திமுகவின் தேர்தல் அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே, 'நீட் தேர்வு ரத்து' குறித்த திமுகவின் குரல் குறைந்திருப்பதை எளிதில் காணலாம்.
இன்று ஆட்சி அமைத்து கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் உருண்டோடிவிட்டன. நீட் தேர்வு ரத்து குறித்த சட்டமுன்வடிவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2021 செப்டம்பர் 13 அன்று நிறைவேற்றிவிட்டு அதுபற்றி வாய் திறக்காமல் மவுனமாக இருந்தது திமுக மேற்படி சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்ட பின்னர் முதலமைச்சர், அமைச்சர் ஆளுநரைப் பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.
இதுதான் நீட் தேர்வை ரத்துசெய்யும் லட்சணமா?
அப்போதெல்லாம் நீட் தேர்வு ரத்து குறித்த சட்டமுன்வடிவு பற்றி ஆளுநரிடம் பேசப்பட்டதா? பேசப்பட்டது என்றால், என்ன பேசப்பட்டது? என்ன வாதங்கள் எடுத்துவைக்கப்பட்டன? என்பன குறித்தெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் உண்டு.
ஆனால், இந்தக் கடமையிலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் நழுவிவிட்டாரோ என்ற எண்ணம் மருத்துவப் படிப்பினைப் பயில விரும்பும் ஏழை, எளிய கிராமப்புற மாணவ, மாணவியர் மத்தியில் நிலவிவந்த நிலையில், தற்போது ஆளுநர் மேற்படி சட்டமுன்வடிவை மறுபரிசீலனை செய்யும்பொருட்டு பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பி இருப்பதாகச் செய்தி வந்துள்ளது. இதுதான் நீட் தேர்வை ரத்துசெய்யும் லட்சணமா என்று தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள்.