சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், காலை 10 மணியளவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
வேட்புமனு தாக்கல் நாளை (டிசம்பர் 4) மாலை 3 மணியுடன் நிறைவடைகிறது. வேட்பு மனுக்கள் 5ஆம் தேதி காலை பரிசீலிக்கப்படும். தொடர்ந்து 6ஆம் தேதி மாலை 4 மணி வரை மனுவை திரும்ப பெறலாம் என்றும் அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, டிசம்பர் 7ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை நடத்தி, தேர்தல் முடிவு டிசம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக பொது குழுவில் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரு பதவியையும் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள் என சட்ட விதி 20 (அ) திருத்தியமைக்கப்பட்டது. டிசம்பர் 1ஆம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களால் இனி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்படுவார்கள் என மாற்றம் செய்யப்பட்டு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், தேர்தல் ஆணையர்களாக பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமனை நியமித்து அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. அதேபோல், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் நாளை வேட்பு மனுக்களை தாக்கல் செய்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:அதிமுக உள்கட்சித் தேர்தலுக்குத் தடைவிதிக்கக் கோரி வழக்கு