அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு இன்று (அக்.7) வெளியாக உள்ள நிலையில் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், செங்கோட்டையன், ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், சண்முகம், கொறடா ராஜேந்திரன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
இதே நேரத்தில் கே.பி. முனுசாமி, மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், J.C.D. பிரபாகர், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
சுமார் இரண்டரை மணி நேரம் இந்த ஆலோசனைகள் நடைபெற்றன. மீண்டும் மாலை 6 மணிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
அதன்படி அதிமுகவில் 11பேர் கொண்ட வழிகாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக கட்சிக்கு ஒரே தலைவராக ஓ.பன்னீர்செல்வம் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் முடிவாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி சார்பில் 6 பேரும் ஓ. பன்னீர்செல்வம் சார்பில் 5 பேரும் வழிகாட்டுக் குழுவில் இடம் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் அமைச்சர் ஜெயக்குமார், சி.வி. சண்முகம், தங்கமணி, வேலுமணி, முன்னாள் எம்பிக்கள் நத்தம் விஸ்வநாதன், அன்வர் ராஜா, ஆகியோர் இடம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஓ. பன்னீர்செல்வம் சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன், JCD பிரபாகர், முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம், சண்முகநாதன், தேனி கணேசன் அல்லது விருதுநகர் பாலகங்கா ஆகியோரில் 5 பேர் இடம் பெறஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுக்குழுவில் கட்சியின் விதிகளில் திருத்தம் செய்து, இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கிவிட்டு, ஒரே ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் அறிவிக்கப்பட இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் முதலமைச்சர் யார் என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.