தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து தொகுதிப்பங்கீடு, வேட்பாளர் பட்டியல் உள்ளிட்டப் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதிமுக முதல் மற்றும் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதில் பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய தேர்தல்களில் அதிமுகவில் சீட் ஒதுக்கீடு எப்படி நடைபெற்றது என்பது தொடர்பாக சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்த போது, தேர்தலில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது புரியாத புதிராகவே இருக்கும். வேட்பாளர் பட்டியல் ஊடகங்களில் வெளியான பின்னரே, சீட் பெற்றவர்களுக்கே தாங்கள் வேட்பாளர் எனத் தெரியவரும். அந்த அளவுக்கு வேட்பாளர் பட்டியல் ரகசியம் காக்கப்படும்.
லாட்டரியில் பரிசு விழுந்தது போல், அதிமுகவில் சாதாரண கடைக்கோடி தொண்டருக்குக் கூட எம்.எல்.ஏ, எம்.பி தேர்தலில் போட்டியிட திடீர் வாய்ப்பு கிடைக்கும். அதற்குப் பல உதாரணங்களை சொல்லலாம். அதிமுகவில் சாதாரண பதவியில் இருந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், திடீர் என எம்எல்ஏ ஆகி முதலமைச்சர் ஆனவர் தான். இன்று அமைச்சர்களாகவும்,எம்எல்ஏ, எம்பியாகவும் உள்ளவர்களில் பலர், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள்தான்.
ஆனால், கட்சிக் கட்டுப்பாட்டை மீறினால், அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை பாயும். கட்சியின் மூத்தவர்கள் பலருக்குக்கூட தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், உள்ளட்டோருக்கு சில தேர்தல்களில் சீட் கொடுக்காமல், கண்டுகொள்ளாமல் விட்டார் ஜெயலலிதா. இவருக்கு தான் சீட் என யாரும் கணிக்க முடியாத வகையில், ஜெயலலிதாவின் வேட்பாளர் பட்டியல் இருக்கும்.
மொத்தத்தில், ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டுக்குள் கட்சியும், வேட்பாளர் பட்டியலும் இருக்கும். அதேபோல் எதிர்க்கட்சிகள் தொகுதிப் பங்கீடு குறித்து விவாதித்துக்கொண்டிருக்கும்போதே, முதல் ஆளாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பரப்புரைக்கு கிளம்பிவிடுவார் ஜெயலலிதா.
இந்நிலையில், அதிமுகவின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியாகியுள்ளது. இதில் 171 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான அமைச்சர்களுக்கும், எம்எல்ஏக்களுக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகிய எம்பிக்களுக்குக் கூட தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கட்சியிலும், ஆட்சியிலும் பதவியில் உள்ளவர்களுக்கு மீண்டும் சீட் கொடுக்கப்பட்டது ஏன்? அதிக எண்ணிக்கையில் புதிய முகங்களை களம் இறக்காதது ஏன்? ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அதிமுக பல அணிகளாக உடைந்தன. இதனையடுத்து, அணிகளை ஒருங்கிணைத்து முதலமைச்சர் ஆனார், எடப்பாடி பழனிசாமி.
ஆனால், அவரது ஆட்சி நீடிக்காது என சொல்லப்பட்டு வந்த நிலையில், அனைத்தையும் பொய்யாக்கி ஆட்சியை நிறைவு செய்து தேர்தலையும் சந்திக்கிறார், எடப்பாடி பழனிசாமி. பழையவர்களுக்கும், சீனியர்களுக்கும் சீட் கொடுக்காவிட்டால், கட்சியில் தேவையற்ற பிரச்னை உருவாகும் என நன்கு உணர்ந்துள்ளது எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் கூட்டணி. தேர்தல் நேரத்தில் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் எம்எல்ஏக்களுக்கும், சீனியர்களுக்கும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை அனைவரையும் அரவணைத்துச் செல்வதுபோல் தெரிந்தாலும், நிலோபார் கபில், எஸ்.வளர்மதி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் ஆகியோருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. அதேபோல் செம்மலை, ஆறுக்குட்டி, நரசிம்மன், மனோரஞ்சிதம் உள்ளிட்ட 41 எம்எல்ஏக்களுக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் இல்லை.
ஜெயலலிதா தனி ஆளாக வேட்பாளர்களைத் தேர்வு செய்த நிலையில், அனைத்து கோஷ்டிகளையும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக தலைமை உள்ளது. கட்சியில் உள்ள அனைவரையும், அரவணைத்து ஆட்சியை தக்க வைத்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியையும், கட்சியையும் தக்க வைப்பாரா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் படிங்க: கூட்டணியிலிருந்து வெளியேறிய தேமுதிக: அடுத்தது என்ன?