தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'அமைச்சர்தான் வம்பிழுக்கிறார்' - நீட் குறித்த விவாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்! - நீட் குறித்த விவாதத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்

அதிமுக மற்றும் திமுகவினரிடையே நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்.29) காரசாரமான விவாதம் நடைபெற்றது.

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி

By

Published : Apr 29, 2022, 10:27 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் நீண்டுகொண்டே செல்லும் நீட் விலக்கு விவகாரம் சட்டப்பேரவையிலும் வலுவாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக இன்று (ஏப்.29) தமிழ்நாடு சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்து பேசினார். அதில், "அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதற்குக் காரணம், அதிமுக ஆட்சியில் நீட்தேர்வு கொண்டு வரப்பட்டது தான்" என்றார்.

7.5% இடஒதுக்கீடு நான் கையெழுத்திட்டதால் வந்தது:இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனிடையே பேசிய எடப்பாடி பழனிசாமி, "நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதற்கு திமுகவும் காங்கிரசும் தான் காரணம். போராட்டம் நடத்தியதால் வந்ததல்ல 7.5% இட ஒதுக்கீடு. சிறப்புப் பிரிவின்கீழ் நான் கையெழுத்திட்டதால் தான் 7.5 % இட ஒதுக்கீடு வந்தது" என்று கூறினார்.

இட ஒதுக்கீடு சட்டத்துக்கு அங்கீகாரம் பெற்றுத்தந்தது: இதற்குப் பதிலளித்த மா.சுப்பிரமணியன், "முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி இருந்தபோதும், நீங்கள் தலைவராக ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா இருந்த போதும் நீட் வரவில்லை. நீங்கள் முதலமைச்சரான பிறகு தான் நீட் கொண்டு வரப்பட்டது. 7.5% இட ஒதுக்கீடு வந்ததே, நீட் தேர்வை அதிமுக அரசு கொண்டு வந்ததால்தான். அத்தகைய 7.5% இட ஒதுக்கீடு சட்டத்துக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்’’ என்று பதிலுரைத்தார்.

உண்மையை மறைக்கவேண்டாம்:இதற்கு சட்டென்று எழுந்து பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "7.5% இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் கையெழுத்திடவில்லை. முதலமைச்சரின் தனி அதிகாரத்தின் படி, நான் கையெழுத்திட்டதால் தான் 7.5% இட ஒதுக்கீடு வந்தது. உண்மையை மறைக்க வேண்டாம். 2010 காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் தான் 'நீட்' வந்தது" ’என்று தெரிவித்தார்.

'நீட்' -க்கு அஸ்திவாரமிட்டது திமுக:இதனைத்தொடர்ந்து, இடையே குறுக்கிட்ட சபாநாயகர் விவாதம் வேண்டாம் என்ற பிறகு, அமைச்சர் தான் வம்புக்கு இழுக்கிறார் என காரசாரமாக பதிலளித்தார் எடப்பாடி பழனிசாமி. இதற்கிடையே பேசிய ஓ.பன்னீர்செல்வம், "நீட் தேர்வு மசோதாவுக்கு அஸ்திவாரம் போட்டது திமுக தான். அன்று மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சராக இருந்த திமுகவின் காந்திசெல்வன் தான் நீட் தேர்வு மசோதாவில் கையெழுத்திட்டார்", என்றார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் க.பொன்முடி, "நீதிமன்றம் சென்று நீட் விருப்பம் இல்லாத மாநிலங்களுக்கு விலக்கு பெற்றுக்கொடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. ஆனால், நீங்கள் நீதிமன்றத்தில் சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தான் நீட் தேர்வு உங்கள் ஆட்சிக்காலத்தில் உள்ளே நுழைந்தது" என்று கூறினார். இந்த காரசார விவாதத்தால் அவையில் சற்று நேரம் அமளி ஏற்பட்டது.

இதையும் படிங்க: 'ஆளுநர் மாற்றம் அல்ல கோரிக்கை, கவர்னரே கூடாது'- தொல். திருமாவளவன்

ABOUT THE AUTHOR

...view details