சென்னை: தமிழ்நாடு வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் வெளியிட்ட செய்தி குறிப்பில், சென்னை வேளாண்மை துணை இயக்குநர் மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுவினரால், (செப்.22) கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள ஆறு உர உற்பத்தி நிறுவனங்களின், ஒன்பது உர சேமிப்பு கிடங்குகள் மற்றும் மொத்த உர விற்பனைக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், இரண்டு மொத்த உர விற்பனை கடைகளின், வேப்பம் புண்ணாக்கு, ஜிங்க் சல்பேட் மற்றும் சர்க்கரை ஆலைக்கழிவிலிருந்து பெறப்படும் பொட்டாஷ் உர வகைகளை சோதனை செய்தனர். அதில், உரங்களின் புத்தக இருப்பிற்கும், உண்மை இருப்பிற்கும் வித்தியாசங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, இருப்பில் இருந்த 95.730 மெ.டன் உரங்களுக்கு விற்பனை தடை வழங்கப்பட்டது.
மேலும், உர உற்பத்தி நிறுவனங்களின் உரச்சேமிப்பு கிடங்குகளில், காம்ப்ளக்ஸ், டிஏபி, பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட், அம்மோனியம் சல்பேட் மற்றும் ராக் பாஸ்பேட் போன்ற உரங்கள் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ற்கு புறம்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அவை, கைப்பற்றப்பட்டு மொத்தம் 3,078.800 மெ.டன் உரங்களுக்கு விற்பனை தடை வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர, உரக்கட்டுப்பாட்டு ஆணை, 1985–ல் பட்டியலிடப்படாத இடுபொருள் 22.250 மெ.டன் இருப்பில் உள்ளதற்கும் விற்பனை தடை வழங்கப்பட்டுள்ளது.
ஆய்வின் போது, வேளாண்மைத்துறையின் “O” படிவம் ஒப்புதல் மற்றும் உரிய பதிவேடுகள் இல்லாத நீரில் கரையும் உரங்கள் சிப்பமிடும் பிரிவிற்கும் விற்பனை தடை விதிக்கப்பட்டது.