கரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில்10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பது குறித்து கடந்த நவம்பர் மாதம், பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர் பள்ளிகளை திறக்க வேண்டாம் எனக் கருத்துத் தெரிவித்தனர்.
தற்போது கரோனா தொற்று குறைந்து வருவதால், பள்ளிகள் திறப்பு குறித்து, பெற்றோரிடம் கடந்த ஜனவரி 6, 7 தேதிகளில் மீண்டும் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் பெரும்பாலானோர் பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பொங்கல் முடிந்து வரும் 20 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு முடிவெடுத்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அதற்கு ஏற்றாற்போல அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை தூய்மைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, முதல்கட்டமாக பொதுத்தேர்வு எழுதும் 10,12 ஆம் வகுப்புகளுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி தேர்ச்சி அளிக்கப்பட உள்ளதாகவும், 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு அனுமதியுடன் தேர்ச்சி வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.