திருப்பூர் மாவட்ட காவல்துறை பதிவு செய்த கொலை முயற்சி வழக்கில், முஹம்மது இக்ரம் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் பிணை கேட்டு இக்ரம் தாக்கல் செய்த மனுவை, கடந்த மார்ச் மாதம் விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மனிதாபிமான அடிப்படையில் இக்ரமுக்கு இடைக்கால பிணை வழங்கினார்.
இந்நிலையில், பிணையில் வெளிவந்த இக்ரம் மீண்டும் கோவை மாவட்டத்தில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். காவல் துறையினர் வழக்குப்பதிந்து அவரைத் தேடி வரும் அதேவேளையில், இக்ரமுக்கு வழங்கப்பட்ட இடைக்கால பிணையை ரத்து செய்யக்கோரி, நீதிபதி ஜெகதீஷ் சந்திராவிடம் காவல் துறை தரப்பில் குற்றவியல் வழக்கறிஞர் முறையீடு செய்தார்.
இதையடுத்து வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, மனிதாபிமான அடிப்படையில் வைரஸ் தொற்று காலத்தில் நீதிமன்றம் வழங்கும் இடைக்கால பிணையை, இதுபோன்ற சிலர் தவறாக பயன்படுத்துவதாகக் கண்டனம் தெரிவித்தார். பின்னர், பிணை ரத்து தொடர்பான உத்தரவை பிறப்பிக்க, வழக்கை வரும் 18ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: கார்த்தி சிதம்பரம் வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு!