இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் தொடங்கவுள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், ரமலான் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ரமலான் நோன்பு காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனையில் இஸ்லாமியர்களின் சன்னிப் பிரிவு தலைமை காஜி சலாவுதீன் மற்றும் ஷியா பிரிவு காஜி குலாம் முகமது ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைச் செயலாளர் சண்முகம், “கரோனா நோய் பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன.
நோன்பு கஞ்சிக்கான அரிசி 19 தேதியிலிருந்து பள்ளி வாசல்களுக்கு வழங்கப்படும் ஆண்டுதோறும் ரமலான் காலத்தில் 5 ஆயிரத்து 450 டன் அரிசியை, 2 ஆயிரத்து 895 பள்ளி வாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயார் செய்ய தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. ஆனால், தற்போதுள்ள சூழலில் இதுகுறித்து விவாதிக்க இஸ்லாமிய மதத் தலைவர்களை அழைத்து ஆலோசனை செய்யப்பட்டது. இதில் 19ஆம் தேதிக்கு முன்பாக அனைத்து பள்ளி வாசல்களுக்கும் 5 ஆயிரத்து 450 டன் அரிசியை பிரித்து வழங்குவது என்றும், அதனை அவர்கள் சிறு சிறு பகுதிகளாக பிரித்து, நோன்பு கஞ்சியாக இல்லாமல் அரிசியாக வழங்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டது “ என்றார்.
ரமலான் தொழுகையை வீட்டிலேயே நடத்தவும் - தலைமை காஜி அறிவிப்பு! அவரைத்தொடர்ந்து பேசிய தலைமை காஜியின் பிரதிநிதியான நூருல் அமீன், ”இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சிறப்பு தொழுகையை வீட்டிலேயே நடத்த வேண்டும் என்று அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். மேலும், பள்ளி வாசல்களில் கொடுக்கப்படும் நோன்பு கஞ்சிக்கு பதிலாக, அரிசியாக வீடுகளுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது “ எனக் கூறினார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைகிறது - எடப்பாடி பழனிசாமி