தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியது கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது - தமிழ்நாடு அரசு

கல்வியை பொதுப்பட்டியலில் நீடிக்க செய்வது கூட்டாட்சி கட்டமைப்புக்கு அச்சுறுத்தலானது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 18, 2022, 12:36 PM IST

சென்னை: கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றி அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட காலத்தில் கொண்டு வரப்பட்ட அரசியல் சட்ட திருத்தத்தை எதிர்த்து, 'அறம் செய்ய விரும்பு அமைப்பு' சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழ்நாடு உயர் கல்வித்துறை சார்பில் இன்று (அக்.18) பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பதில் மனு: அதில், அரசியல் சட்டம், ஆரம்பத்தில் கல்வி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே விட்டிருந்தது எனவும், கடந்த 1975 முதல் 1977 ஆம் ஆண்டு வரை, 21 மாதங்கள் அவசர நிலை அமலில் இருந்த காலகட்டத்தில், சர்தார் ஸ்வரண் சிங் குழு அறிக்கையின் அடிப்படையில், நாடாளுமன்றத்தில் முறையான எந்த விவாதமும் நடத்தாமல் கல்வி, மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுகளின் ஒப்புதலின்றி, நீட் அறிமுகம்: இதனால், கல்வி குறித்த சட்டங்கள் இயற்றும்போது மாநில சட்டப்பேரவைகளை விட நாடாளுமன்றம் அதிக அதிகாரம் வாய்ந்ததாகி விடுகிறது எனவும், தற்போது தேசிய கல்விக் கொள்கை மூலமாக மத்திய அரசு, மாநில அரசுகளின் தன்னாட்சி உரிமையில் தலையிடுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ மாணவர் சேர்க்கையை ஒழுங்கு படுத்தும் மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில், மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெறாமல், நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது எனவும் தமிழ்நாடு அரசின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமற்ற 'ஒரே கல்விக் கொள்கை': 'இந்தியா' என்பது மாநிலங்கள் அடங்கிய தேசம் என்பதால், ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு மதம் என்ற தத்துவம் கொண்டு வர முடியாது எனவும், நாடு முழுவதற்கும் ஒரே கல்விக் கொள்கை என்பது பொருத்தமற்றது எனவும் கூறப்பட்டுள்ளது. கல்வி கடைக்கோடி வரை சென்றடைவதை மாநில அரசுகள் மட்டுமே உறுதி செய்ய முடியும் என்பதால் கல்வியை இன்னும் பொதுப்பட்டியலில் நீடிக்க செய்வது கூட்டாட்சி கட்டமைப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எனவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு விளக்கம்: இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களுடன் பல்வேறு சமூக, கலாச்சாரங்களை கொண்ட இந்தியாவில், கூட்டாட்சி கட்டமைப்பின் அடிப்படையில் தேசிய வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பங்களிப்பு வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கல்வி நிதிக்கு முன்னுரிமை:மனித வளர்ச்சிக்கு முதன்மையான கல்விக்கு நிதி ஒதுக்குவது உள்ளிட்டவற்றுக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும், கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றி கொண்டு வரப்பட்ட அரசியல் சட்ட திருத்தம் மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடும் வகையில் இல்லை எனவும் மாறாக பல்வேறு மாநிலங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவே உதவியுள்ளது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசியல் சட்ட திருத்தம், கல்வியின் மேம்பாட்டுக்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வகை செய்துள்ளது என்பதால், தேசிய கல்விக் கொள்கை, மாநில அரசுகளின் தன்னாட்சி அதிகாரத்தை பறித்து விடுவதாகக் கூறுவது தவறு எனவும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை, நீதிபதிகள் மகாதேவன், சுந்தர் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய முழு அமர்வு, வருகிற நவ.7 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

இதையும் படிங்க: கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து வழக்கு.. நவம்பர் 7ஆம் தேதி விசாரணை

ABOUT THE AUTHOR

...view details