சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி, ஜனவரி 4ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். 2023 செப்டம்பர் மாதம் ஓய்வுபெறவுள்ள இவரை, எந்தக் காரணமும் தெரிவிக்காமல் தற்போது மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் செப்டம்பர் 16ஆம் தேதி குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைசெய்துள்ளது.
75 நீதிமன்றங்களோடு 'சார்டர்ட் உயர் நீதிமன்றம்' என்ற பெருமைகொண்ட சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து நான்கு நீதிபதிகள் மட்டுமே கொண்ட மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு சஞ்ஜிப் பானர்ஜியை மாற்ற பரிந்துரைக்கப்பட்டது, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த முடிவை மறு பரிசீலனை செய்யக்கோரி, ஏற்கனவே 237 வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தனர். மேலும், இந்தியாவின் மிகப் பழமையான வழங்கறிஞர் சங்கமான 'மெட்ராஸ் பார் அசோசியேசன்' உறுப்பினர்களான மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ். ராமன், அரவிந்த் பாண்டியன், நளினி சிதம்பரம், என்.ஆர். இளங்கோ உள்ளிட்ட 31 பேர் உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கு கடிதம் அனுப்பினர்.
அதில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நீதிபதிகளின் இடமாற்றம் நடைபெற வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது சென்னை உயர் நீதிமன்றத்தில் சஞ்ஜிப் பானர்ஜியைப் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கைவைத்திருந்தனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டதாக, ஒன்றிய சட்ட அமைச்சகம் சார்பில் நேற்று முந்தினம் (நவம்பர் 15) அறிவிப்பு வெளியானது. இதில் நீதிமன்றங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற வழக்கறிஞர்களின் கருத்துகளை விரிவாகப் பார்க்கலாம்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு
உச்ச நீதிமன்ற தீர்ப்பில், நீதிபதிகளின் இடமாற்றம் என்பது பொதுநலன் - நீதித் துறை நிர்வாக நலனைக் கருத்தில்கொண்டு மட்டுமே நடைபெற வேண்டும் என 1994ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு தெரிவிக்கிறது.
கொலீஜியத்தின் பரிந்துரை திருப்தி அளிக்காத மாற்றலுக்கு உள்ளாகும் நீதிபதி தனது மாற்றலை எதிர்த்தும், மறுபரிசீலனை செய்யக்கோரியும் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம்.
நீண்டகாலமாக இருந்துவரும் இந்தப் பிரச்சினைக்கு நீதிமன்றம் மட்டும்தான் ஒரே தீர்வா? வேறு என்ன செய்ய வேண்டும் என வழக்கறிஞர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கின்றனர்.
கே.என். விஜயன் (மூத்த வழக்கறிஞர், உயர் நீதிமன்றம்), "நீதிபதிகள் நியமனம், மாற்றத்தில் இதுவரை வெளிப்படைத்தன்மை இல்லை. இதனால் பல்வேறு சந்தேகங்கள் ஏற்படுகின்றன. அதைக் களையும்வகையில் நீதிபதிகள் மாற்றத்திற்கான காரணம் என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு செய்வதால், நீதி நிர்வாகத்தின் மீது மக்கள், வழக்கறிஞர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படும்.
2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்குப் பிறகு அனைத்துத் துறைகள், ஆணையங்கள், தீர்ப்பாயங்கள் தலைவர்கள் நியமனம் என்பது ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. நீதித் துறையையும் கட்டுப்படுத்தும் வகையிலேயே நீதிபதிகள் மாற்ற உத்தரவை ஒன்றிய அரசு கையில் எடுத்துள்ளது. இது சுதந்திரமான நீதி நிர்வாகத்தை கேள்விக் குறியாக்குகிறது.
இதனால், ஒன்றிய அரசுக்கு எதிராக எந்தக் கடினமான உத்தரவையோ? அறிவுறுத்தல்களையோ? நீதிபதிகளால் வழங்க முடியாமல் போக வாய்ப்பு உள்ளது" என வேதனை தெரிவிக்கிறார்.
என்.ஜி.ஆர். பிரசாத் (வழக்கறிஞர், உயர் நீதிமன்றம்), "நீதிபதிகள் பணி இடமாற்றத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றால், நீதிமன்றத்தின் மாண்பு கேள்விக்குறியாகும். இதனால், அரசு தவறு செய்யும்பட்சத்தில் அரசுக்கு எதிராக எந்தக் கருத்தையும் நீதிபதிகள் தெரிவிக்க முடியாது.
கடந்த ஓராண்டாக எந்தத் தரப்பிற்கும் சாதகமாக இல்லாமல் பல்வேறு தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி மாற்றப்படுவதால், சாதாரண மக்களுக்கான நீதி எப்படி கிடைக்கும் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நீதிபதிகள் மாற்றத்தில் உள்ள சந்தேகங்களைக் களைய, நீதித் துறை விசாரணை நடத்தப்பட வேண்டும். நீதிபதி இடமாற்றத்துக்கு உண்மையான காரணத்தை வெளியிட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
அரசுக்கு ஆதரவாக நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டைப் போக்க வெளிப்படைத்தன்மை மட்டுமே நீதிமன்றங்களின் மாண்பையும், ஜனநாயகத்தையும் காக்கும் என்பதால் எந்தவிதச் சந்தேகமும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
இதையும் படிங்க:உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமனம்