தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சட்டப் பல்கலைக்கழக கல்விக்குழும உறுப்பினராக மூத்த வழக்கறிஞர் விடுதலை நியமனம்! - தேசிய சட்டப்பள்ளி

சென்னை: தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் கல்விக் குழும உறுப்பினராக, மூத்த வழக்கறிஞர் விடுதலையை நியமனம் செய்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி உத்தரவிட்டுள்ளார்.

viduthalai
viduthalai

By

Published : Jun 5, 2020, 2:29 PM IST

இந்தியாவில் சட்டக் கல்வியின் மேம்பாட்டிற்கும், ஆராய்ச்சிக்கும் நாடு முழுவதும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட 22 சட்டப் பல்கலைக்கழகங்கள் மத்திய அரசால் நிறுவப்பட்டுள்ளன. இந்தியாவின் முதல் சட்டப் பல்கலைக்கழகமான, இந்திய தேசிய சட்டப்பள்ளி பெங்களூருவிலும், பின்னர் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் துவங்கப்பட்டன.

இந்திய பல்கலைக்கழக மானியக் குழுவின் மேற்பார்வையிலும், இந்திய வழக்கறிஞர்கள் மன்றத்தின் கட்டுப்பாட்டிலும் இப்பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன.

இச்சட்டப் பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த இளநிலை சட்டப் படிப்புகளும், மூன்றாண்டு இளநிலை படிப்புகளும், மற்றும் இரண்டாண்டு முதுநிலை சட்டப் படிப்புகளும், சட்டத்தில் ஆய்வுப் படிப்புகளும் உள்ளன. ஆண்டுதோறும் பொது சட்ட நுழைவுத் தேர்வு (Common Law Admission Test-CLAT) மூலம் மாணவர்கள் இப்பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (Tamil Nadu National Law School), திருச்சியில் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்திற்கு வேந்தராக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி உள்ளார். தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்திற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினரை கல்விக்குழு உறுப்பினராக நியமிக்க வேண்டுமென சட்டம் உள்ளது.

அதனடிப்படையில் பல்கலைக்கழக வேந்தரான உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞரும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினருமான, மூத்த வழக்கறிஞர் விடுதலையை தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் கல்விக் குழும உறுப்பினராக மூன்று ஆண்டுகளுக்கு நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரி தி.க. வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details