சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் மற்றும் திருமடங்களில் 31 யானைகள் உள்ளன. யானைகளின் பராமரிப்பில் மிகுந்த அக்கறை செலுத்த, யானைகளைப் பராமரிக்கும் யானைப்பாகர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டும், யானைகள் பராமரிக்கப்பட்டும் வருகின்றன.
இயற்கையான சூழலில் மண் தரையில் யானைகள் கட்டப்பட்டுள்ளன. யானை கொட்டகை இயற்கையான வெளிச்சம் மற்றும் காற்றோட்டத்துடன் கூடியதாக அமைந்துள்ளது.
யானைகளுக்கு நடைப்பயிற்சி
மேலும் மா, தென்னை, புளி, வேம்பு, ஆல், அரசு, அத்தி போன்ற மரங்கள் அமைந்துள்ள இடங்கள் திருக்கோயிலுக்கு அருகாமையில் மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருப்பின், யானைகள் இவ்விடங்களில் கட்டி வைக்கப்பட்டுள்ளது.
யானைகளின் வயது, எடை, உடல் தகுதியை பொறுத்து தினமும் இருவேளை 5 முதல் 10 கிலோ மீட்டருக்கு குறையாமல் நடைப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைப்பயிற்சி இயற்கையான மண் பாதையில் அளிக்கப்பட்டு வருகிறது. திருக்கோயில் யானைகளுக்கு சிறு சிறு வேலைகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
யானைகளின் உணவு மற்றும் அன்றாடத் தேவை
அன்றாடத் திருக்கோயில் பணிகளின்போது அதிக நேரம் நிற்க வேண்டி இருப்பின் அந்த இடத்தில் யானைகள் வசதியாக நிற்கும் அளவிற்கு கல் அல்லது கான்கிரீட் போடப்பட்ட இடங்களை பெயர்த்து அப்புறப்படுத்திவிட்டு, அதனடியில் உள்ள இயற்கையான மண் பரப்பில் யானையை நிறுத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை கூறியுள்ளது.
யானைகளை இயற்கையாக அமைந்துள்ள நீர் நிலைகளை தேர்வு செய்து குளிக்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் இவ்வாறான சூழ்நிலை இல்லாதிருப்பின், இதற்கு மாற்று ஏற்பாடாக தொட்டிக் குளியல் (Bath tub), பூவாளி குளியல் (Shower Bath), ஆழ்குழாய் கிணற்று நீர் குளியல் (Borewell Bath) மற்றும் குழாய்களுடன் கூடிய விசை இயந்திரம் பொருத்தப்பட்டதன் (Motor and Hosepipes) மூலம் பெறப்படும் நீரில் குளியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சூழ்நிலைக்கேற்ப மேற்கொள்ளப்படும் எனக் கோரப்பட்டுள்ளது.
யானையின் மொத்த எடையில் ஐந்து விழுக்காடு அளவில் பனை ஓலை மற்றும் பச்சைப்புல் தினசரி உணவாக அளிக்கப்படுகிறது. பனை ஓலைக்கு பதிலாக தென்னை ஓலை அல்லது சோளம் வழங்கப்படுகிறது.