இதுகுறித்து ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தொழிலாளர்களின் உரிமைகளும், நலன்களும் எவ்வளவுக்கு எவ்வளவு பாதுகாக்கப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு தொழில் வளம் பெருகும். இதனால்தான் அண்ணா 'தொழிலாளர் வாழ்வு பாழ் நிலமாக அல்லாமல் பசுமையோடு பூங்காற்று வீசும் தோட்டமாக இருக்க வேண்டும்' என்றார். தொழில்கள் வளர வேண்டும், தொழிலாளர்கள் வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டால், நாடு நிச்சயம் வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இல்லாத சூழ்நிலையில், தொழிலாளர்களின் நலன் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.
அண்மையில், அசாம் மாநிலத்தில் நடைபெற்ற மத்திய அறங்காவலர் குழுக் கூட்டத்தில், கடந்த இரண்டு ஆண்களாக நீடித்து வந்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.5 விழுக்காட்டிலிருந்து 8.1 விழுக்காடாக குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும், நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என்பது தங்களுடைய ஓய்வு காலத்திற்கு பயனளிக்கக்கூடிய நிதி என்பதை தொழிலாளர்கள் நன்கு உணர்ந்துள்ள நிலையில், அதன்மீதான வட்டி விகிதம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவது தொழிலாளர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
2015-16ஆம் ஆண்டில் 8.8 விழுக்காடாக இருந்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் படிப்படியாக குறைந்து தற்போது 8.1 விழுக்காடு என்ற நிலைக்கு வந்திருக்கிறது. மேற்படி வட்டிக் குறைப்பு என்பது கடந்த 40 ஆண்டுகளுக்கு முந்தைய வட்டி விகிதம் ஆகும். அதாவது, 1977-78 ஆம் ஆண்டில் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8 விழுக்காடாக இருந்தது. கிட்டத்தட்ட அந்த நிலைக்கு தற்போது வட்டி விகிதம் வந்துவிட்டது. சர்வதேச சூழ்நிலை, சமூகப் பாதுகாப்பு மற்றும் சந்தை நிலைத்தன்மை, கரோனா பாதிப்பு, உக்ரைன் போர், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் பணக் கொள்கையில் சிக்கனத்தைக் கடைபிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வட்டி விகிதம் குறைக்கப்படுவதாக கூறப்படுகிறது.