தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தேர்தல் வந்துவிட்டது... அதிமுகவினரின் ஆட்டமும் ஆரம்பித்துவிட்டது - கனிமொழி

சென்னை: தேர்தல் வந்துவிட்டதால் அதிமுகவினரின் ஆட்டம் ஆரம்பித்துவிட்டதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

election

By

Published : Mar 22, 2019, 10:56 AM IST

தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவைத் தேர்தலும், காலியாக இருக்கும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலும் நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன. மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பரப்புரையை தொடங்கியிருக்கும் சூழலில் அதிமுக தரப்பில் முதலமைச்சர் பழனிசாமி இன்று முதல் பரப்புரையை தொடங்கியிருக்கிறார்.

ஆனால், அதிமுக சார்பில் முதலமைச்சர் பரப்புரையை தொடங்குவதற்கு முன்னதாகவே அமைச்சர்கள், வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க ஆரம்பித்துவிட்டனர். குறிப்பாக திமுக தனது பரப்புரையை தொடங்குவதற்கு முன்னதாகவே அமைச்சர்களும், வேட்பாளர்களும் அதிமுகவுக்காகவும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காகவும் பொதுக்கூட்டங்களிலும், பல்வேறு மேடைகளிலும் பேச ஆரம்பித்துவிட்டனர். அதிமுகவினரின் இந்த வேகம், காண்போர் அனைவரையும் வாய் பிளக்க வைத்தது. ஆனால் வந்த வேகத்தில் விழுவது போல் அதிமுக அமைச்சர்களின் செயல்பாடும் பேச்சும் வந்த வேகத்தில் தற்போது நெட்டிசன்களின் மீம்ஸ் வலைக்குள் விழுந்துள்ளது.

விளாத்திக் குளத்துக்கு நடைபெற இருக்கும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் சின்னப்பன் களமிறங்குகிறார். அவர் தனது பரப்புரைக் கூட்டத்தை மார்ச் 20ஆம் தேதி நடத்தினார். அப்போது ஏராளமான மக்கள் முன்னிலையில் பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாக்கு கேட்கிறேன் என்று அத்தொகுதியில் களமிறங்க இருக்கும், கனிமொழிக்கு வாக்கு செலுத்த வேண்டும் என கூறினார். இதனைக்கேட்டு அங்கிருந்த மக்கள் சிரித்ததை அடுத்து சுதாரித்து கொண்ட அவர் “தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாக்களியுங்கள்” என்று கூறி சமாளித்தார்.

அதேபோல், கூட்டம் ஒன்றில்பேசிய அமைச்சர் ஓ.எஸ் மணியன், “ இந்த நாட்டுக்கு பாதுகாப்பான முதலமைச்சர் வேண்டும். அதற்கு மோடி முதலமைச்சராக இரட்டை இலைக்கு ஓட்டு போட வேண்டும்” என்றார். அதுமட்டுமின்றி எப்போதும் எதையாவது பேசி மாட்டிக்கொள்ளும் அமைச்சர் என எதிர்க்கட்சியினரால் கூறப்படும் திண்டுக்கல் சீனிவாசன், மக்களவைத் தேர்தலையொட்டி நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசுகையில், ”மக்களவைத் தேர்தலில் மோடி போட்டியிடுகிறார். அதேபோல் மோடியின் பேரன் ராகுல் காந்தியும் போட்டியிடுகிறார்” என்றார்.

தேர்தலுக்காக இவ்வளவு வேகமாக அமைச்சர்கள் உள்ளிட்டோர் பணியை ஆரம்பித்துவிட்டனரே என்ற உற்சாகத்தில் இருந்த அதிமுகவினரிடையே அமைச்சர்கள், வேட்பாளரின் இதுபோன்ற பேச்சுக்கள் தற்போது முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவர்களின் பேச்சை வைத்து, ”தேர்தல் வந்துவிட்டது அதிமுகவினரின் ஆட்டமும் ஆரம்பித்துவிட்டது, இது சும்மா ட்ரெயலர்தான்மா நீ இன்னும் மெயின் பிக்சர் பார்க்கல” எனவும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, ஏற்கனவே ”பாஜகவுடன் கூட்டணி அமைத்துவயிற்றில் புளியை கரைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அமைச்சர்களும், வேட்பாளர்களும் இதுபோலவே பேசிக்கொண்டிருந்தால், ஜெயலலிதா கட்டிக்காத்த கட்சியின் நிலை இத்தேர்தலில் என்னவாகும்” என ரத்தத்தின் ரத்தங்களிடமிருந்து முணுமுணுப்பு சத்தம் கேட்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

ABOUT THE AUTHOR

...view details