அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் பெயர் மற்றும் வழிகாட்டுதல் குழு அறிவிப்பு கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி பெயரை ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களாக திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ், ஜே.சி.டி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன், மோகன், கோபாலகிருஷ்ணன், மாணிக்கம் ஆகிய 11 பேரை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
நிகழ்ச்சியில் தொடக்கவுரை ஆற்றிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ”மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வில் அவைத்தலைவர் மதுசூதனன், உடல் நலமில்லாமல் சிகிச்சையில் இருப்பதால் கலந்து கொள்ள இயலவில்லை. இருப்பினும் அவரின் முழு ஒப்புதலோடு இந்நிகழ்வு நடைபெறுகிறது “ என்று கூறினார்.
அவர் அவ்வாறு கூறிய பத்து நிமிடங்களில் அவைத்தலைவர் மதுசூதனன் அங்கு திடீரென வந்தார். நடக்கவே முடியாமல் கைத்தாங்கலாக வந்த அவரைப் பார்த்த ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அவரை கையை பிடித்து அழைத்து பொன்னாடை அணிவித்தனர். பின்னர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் நினைவிடங்களுக்கு சென்ற ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோருடன் மதுசூதனனும் சென்று மரியாதை செலுத்தினார்.