அதிமுக பொதுக்குழு வரும் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சேலத்தைச் சேர்ந்தக் கட்சி உறுப்பினர் சுந்தரம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ’’ கடந்த 2016ஆம் ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு, பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்துவிட்டு, பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும், உறுப்பினர்களின் பரிந்துரை இல்லாமல் விதிகளுக்கு மாறாக நியமனம் ஆகியுள்ளனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையத்தில், 2019ஆம் ஆண்டு இறுதிக்குள் உட்கட்சித் தேர்தலை நடத்தி முடிப்பதாக கட்சி சார்பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை தேர்தல் நடத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்க வரும் 24ஆம் தேதி கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே உட்கட்சித் தேர்தலை நடத்த கட்சியின் அவைத்தலைவருக்கு உத்தரவிட வேண்டும். மேலும், பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்'' என மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உட்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிடுவதில்லை என்றும், சின்னங்கள் தொடர்பான பிரச்னை எழும்போது மட்டுமே தேர்தல் ஆணையம் தலையிடும் என்றும் விளக்கமளித்தார்.
தொடர்ந்து நீதிபதி, அரசியல் கட்சிக்கு உத்தரவிடக்கோரி ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது என்றும், இது தொடர்பாக சிவில் நீதிமன்றத்தில் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் மனுதாரருக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து, மனுவை திரும்பப் பெற மனுதாரர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. அதற்கு அனுமதியளித்த நீதிபதி ஆதிகேசவலு, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.