'ஒற்றைத் தலைமை வேண்டும்' என்ற ராஜன் செல்லப்பாவின் ஒற்றை முழக்கத்தால் ரத்தத்தின் ரத்தங்களுக்கு ரத்த அழுத்தம் மீண்டும் எகிறத் தொடங்கியுள்ளது. 'ராஜன் செல்லப்பா ஓபிஎஸ்க்கு ஆதரவாகத்தான் பேசியிருக்கிறார்' என்றும் 'இல்லை இல்லை அவர் ஈபிஎஸ்க்கு ஆதரவாகத்தான் பேசியிருக்கிறார்' என்றும் பேச்சுகள் அடிபடத் தொடங்கியிருக்கின்றன. இது இப்படி இருக்க, 'அவர் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவருக்கும் ஆதரவாக பேசவில்லை, சசிகலா விரைவில் விடுதலை ஆகப்போகிறார் எனவே அவரை மனதில் வைத்துதான் இப்படி பேசியிருக்கிறார்' எனவும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
அதிமுக-விலிருந்து டிடிவி தினகரன் ஓரங்கட்டப்பட்டு ஈபிஎஸ், ஓபிஎஸ் இணைந்தாலும், ஓபிஎஸ்-க்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்ற தகவல் கசிந்துகொண்டே இருந்தது. ஆனால், 'நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்' என்பதை தமிழ்நாட்டிற்கும், டெல்லிக்கும் உணர்த்த இருவரும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுக்கொண்டே இருந்தனர்.
இந்தச் சூழலில், மக்களவைத் தேர்தல் வந்ததும் ஓபிஎஸ் தனது மகனுக்கு தேனியில் சீட் வாங்கி வெற்றி பெறவைத்து மத்திய அமைச்சரவையில் இடம்பெற வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். 37 தொகுதிகளில் அதிமுக தோற்றாலும் தேனியில் மட்டும் வெற்றி பெற்று அவர் தனது செல்வாக்கை டெல்லிக்கு உரக்கச் சொன்னாலும் அந்த வெற்றி அதிமுக சீனியர்கள் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியது.
அதற்குக் காரணம், 'தனது மகனை வெற்றி பெற வைக்க காட்டிய முனைப்பை ஆண்டிப்பட்டி, பெரியகுளம் ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் அவர் காண்பிக்கவில்லை. இதனால் அவர் டெல்லியில் நல்ல பெயரை வாங்கிக்கொண்டு கட்சிக்கு அவப்பெயரை வாங்கிக் கொடுத்துவிட்டார்' என கட்சியினர் முணுமுணுப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இதனையடுத்துதான், ராஜன் செல்லப்பா 'ஒற்றைத் தலைமை' என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி ஈபிஎஸ்-க்கு மறைமுக ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
இது இப்படி இருக்க அதிமுகவின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், ஓபிஎஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கட்சியின் தலைமை அலுவலகத்தின் உள்ளே, “எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை” என்ற பாணியில் ஒற்றுமையாக இருந்து, சுமுகமாக பேசினோம் என பலர் கூறினாலும், தலைமை அலுவலகத்திற்கு வெளியே நடந்ததோ வேறு.
இன்று காலை முதலில் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று அதிமுக தலைமை அலுவலகத்தை கிடுகிடுக்க வைத்திருக்கும் என்று கூறலாம். அந்தப் போஸ்டரில், “புதிய கழக பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள் எடப்பாடியாரே” என்ற வாசகம், அக்கட்சிக்குள் இருக்கும் உட்கட்சிப் பூசல் - வீதிக்கு வந்துவிட்டதையே உணர்த்துகிறது.
ஏனெனில், மோடி வேட்புமனுத் தாக்கல் செய்தபோது ஓபிஎஸ் அவரது மகன் ஆகிய இருவரும் காவி வேஷ்டியில் வாரணாசிக்குச் சென்று தங்களது விசுவாசத்தை டெல்லிக்கு உணர்த்தினர். அந்த சமயத்தில், ஓபிஎஸ் மீது சந்தேகம் கொண்ட ஈபிஎஸ் தனது இரண்டு கரங்களான தங்கமணியையும், வேலுமணியையும் கூடவே அனுப்பி வைத்தார். இதனை பன்னீர் ரசிக்கவில்லை. மேலும், அவர்கள் இருவரும் கூடவே சென்றதால் தன்னால் நினைத்ததை பாஜக மேலிடத்திடம் பேச முடியாமல் அவர் திரும்பிவிட்டார் என தகவல் வெளியானது.
அதேநேரம் அதிமுகவிலிருந்து விலகி ஓபிஎஸ் பாஜகவில் சேரப்போவதாக தகவல் வெளியானது. ஆனால், “கட்சியிலிருந்து நான் விலகமாட்டேன். நான் இறந்தாலும் அதிமுக கொடியை என் மீது போர்த்த வேண்டும்” என்று கூறி அவர் மறுத்துவிட்டார். இருப்பினும், நெருப்பில்லாமல் புகையுமா என்பதன் அடிப்படையில், பாஜகவுடன் சேர்ந்து அதிமுகவை ஓபிஎஸ் கைப்பற்ற நினைக்கிறார் என்ற சந்தேகம் அப்போதே ஈபிஎஸ்-க்கு இருந்தது. அதனையடுத்து மத்திய அமைச்சரவையில் தனது மகனுக்கு இடம் வாங்கிவிட ஓபிஎஸ் முட்டி மோதியதன் மூலம் ஈபிஎஸ்ஸின் சந்தேகம் வலுக்கத் தொடங்கியது.
இந்த நிலையில்தான் ராஜன் செல்லப்பா ஒற்றைத் தலைமை குறித்து வாய் திறந்தார். இதனை ஈபிஎஸ் நன்றாக பயன்படுத்திக்கொண்டார். அந்த வகையில், அவரது ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியிருக்கின்றனர்.