தங்க மங்கை கோமதிக்கு அதிமுக ஊக்கத் தொகை - ஓபிஎஸ்
2019-04-30 10:41:36
சென்னை: ஆசிய தடகள போட்டிகளில் 800 மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு அதிமுக சார்பில் ரூ 15 லட்சம் ஊக்கத் தொகை அளிக்கப்படும் என ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
கத்தாரில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் திருச்சியைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து 800 மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றார். இதனையடுத்து அவருக்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பாராட்டையும், ஊக்கத் தொகையையும் அளித்துவருகின்றனர்.
இந்நிலையில், தங்கம் வென்ற கோமதிக்கு அதிமுக சார்பில் ரூ 15 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். இதேபோல், வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜுக்கு ரூ 10 லட்சம் ஊக்கத் தொகை அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.