சென்னை: ஜூலை 11ஆம் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி, ஓ.பன்னீர்செல்வமும், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவில், கட்சி விதிப்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட அதிகாரமுள்ளதாகவும், வேறு எவருக்கும் அந்த அதிகாரம் இல்லை என்பதால், 11ஆம் தேதி நடக்க உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த மனுவில், பொதுக்குழுவை கூட்ட 15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும், அந்த விதிகள் பின்பற்றப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, ஆனால் வேறு நிவாரணங்களை பெற உயர் நீதிமன்றத்தை அணுகும்படி தெரிவித்துள்ளது என்றார்.