திண்டுக்கல் மாவட்டம் அவிலிப்பட்டியைச் சேர்ந்த வழக்குரைஞர் சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ள மனுவில்,
"அதிமுக பொதுச்செயலாளராகப் பதவி வகித்துவந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பொதுச்செயலாளர் பதவி கலைக்கப்பட்டது.
கட்சியின் சட்டத்திட்டத்தின்படி, கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களும் வாக்களித்து பொதுச்செயலாளர் பதவி தேர்வுசெய்யப்பட வேண்டும் என்ற விதியை மாற்றவோ, திருத்தவோ முடியாது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் உள்கட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பொதுச்செயலாளர் பதவி உள்பட எந்த நிர்வாகிகளுக்கான தேர்தலும் நடத்தப்படவில்லை.
தேர்தல் நடத்தாமல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனப் பதவிகளை உருவாக்கி அதிமுக கட்சியை நடத்திவருகின்றனர்.
இதற்கிடையே கட்சியில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற சிக்கலால் கட்சி உறுப்பினர்களிடையே வெறுப்புணர்வு ஏற்பட்டுவருவதால், கட்சிக்கு இரட்டைத் தலைமையை உறுப்பினர்கள் விரும்பவில்லை என்பதாலும் புதிய பொதுச்செயலாளர் பதவி உள்பட நிர்வாகிகளுக்கான உள்கட்சித் தேர்தல் நடத்தக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும், உள்கட்சித் தேர்தல் நடத்தும்வரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கட்சிக்குப் புதிய நிர்வாகிகளை நியமிக்கத் தடைவிதிக்க வேண்டும்.
கட்சியின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திர பாபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் யாரும் முன்னிலையாகாததால் விசாரணையை நான்கு வாரத்திற்கு தள்ளிவைத்தார்.