சென்னை பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்ற இளம் பெண் மீது பேனர் விழுந்ததில், அவர் பின்னால் வந்த லாரி ஏறியதில் அப்பெண் உயிரிழந்தார். அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் என்பவரின் இல்ல விழாவிற்காக சாலையின் மையப்பகுதியில் வைக்கப்பட்ட பேனரே சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமானது.
சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கு - அதிமுக முன்னாள் கவுன்சிலர் கைது
சென்னை: பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெயகோபாலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் பீகாரரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அது மட்டுமல்லாமல் விபத்துக்கு காரணமாக இருந்த பேனரை அச்சடித்த அச்சகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தமிழ்நாடு மட்டுமில்லாது நாடு முழுவதிலும் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனால் அந்த பேனரை வைத்த அதிமுக நிர்வாகியை கைது செய்யும்படி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கோரிக்கை வைத்ததோடு, மாநில அரசை கடுமையாக விமர்சித்தனர்.
அதனைத் தொடர்ந்து, சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பேனர் விழுந்து இளம் பெண் சுபஸ்ரீ உயிரிழந்ததற்கு காரணமான முக்கிய குற்றவாளியான ஜெயகோபாலை ஏன் இது வரை கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பினர். இதைத் தொடர்ந்து காவல் துறையினர் ஜெயகோபாலை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடிவந்தனர். இந்நிலையில் இன்று கிருஷ்ணகிரி பகுதியில் பதுங்கியிருந்த அவரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.