சென்னை:தேர்தல் அறிவிப்பு வெளியானதிலிருந்து கூட்டணி இடப் பங்கீடு இழுபறி, பாஜக தனித்துப் போட்டி, ஜெயக்குமாரின் சிங்கம் சிங்கிளாதான் நிக்கும்வரை நிகழ்ந்தவை பற்றி ஒரு பார்வை...
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல்கள் பிப்ரவரி 19ஆம் தேதியன்று ஒரே கட்டமாக நடைபெறுமென தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
பாஜக அதிமுக தொகுதிப் பங்கீடு ஆலோசனை
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமாக 'புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகை'யில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக, பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்றது.
இந்தக் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் அதிமுக சார்பாக ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமி, வைத்தியலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார், அமைப்புச் செயலாளர் மனோஜ் பாண்டியன்,
பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பொறுப்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன், மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எட்டப்படாத உடன்பாடு
சரியாக மதியம் 12.40 மணிக்குத் தொடங்கிய கூட்டணிப் பேச்சுவார்த்தை மாலை 4 மணிவரை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தொகுதிப் பங்கீடு இழுபறி நீடித்தது. இது குறித்து பின்னர் செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய அண்ணாமலை, "கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. எங்களுக்கு எந்தெந்த இடங்கள் வேண்டும் என அவர்களிடம் கேட்டுள்ளோம்.
அவர்கள் மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளிடம் இது குறித்து பேசிவிட்டு முடிவெடுப்பார்கள். இன்று (ஜனவரி 29) நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவில் எந்த ஒரு உடன்பாடும் எட்டப்படவில்லை, அடுத்தகட்ட பேச்சுவார்த்தை தொடரும்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "அதிமுக சிறந்த எதிர்க்கட்சியாகச் செயல்பட்டுவருகிறது. திமுகவின் தவறுகளையும், மக்களின் பிரச்சினைகளையும் தொடர்ச்சியாக அதிமுக மக்கள் மன்றத்தில் பேசிவருகிறது" என்றார். நகர்ப்புறங்களில் பாஜக வலுவாக உள்ளதாகத் தெரிவித்த அவர், நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமுகமாகவே நடைபெற்றதாகக் கூறினார்.
அவர்கள் கேட்கலாம்; ஆனால் கட்சியின் நலம் பார்ப்பது கடமை
தமிழ்நாடு ஆளுநர் குறித்து முரசொலி கட்டுரைக்கு அண்ணாமலை சொன்னது:
- தமிழ்நாடு அரசைப் பாராட்டி பலமுறை ஆளுநர் பேசியுள்ளார். அப்போதெல்லாம் விமர்சிக்காத நபர்கள் தற்போது பேசியுள்ளனர். இதனை பாஜக கண்டிக்கிறது, மக்களும் கண்டிக்க வேண்டும்.
அதன்பின் செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய ஜெயக்குமார், "பாஜகவுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றுவருகிறது. எந்தெந்த இடங்களை வழங்குவது குறித்து தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும்.
என்ன வேண்டுமானாலும் அவர்கள் கேட்கலாம். ஆனால் கட்சி நலம் பார்த்து முடிவெடுக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது" எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஆர்பிஐ அலுவலர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை அளிக்காமல் இருந்தது கண்டிக்கத்தக்கது. ஆனால் அவர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர் என்றார்.
ஆளுநர் குறித்த முரசொலி கட்டுரைக்கு ஜெயக்குமார் இவ்வாறு பதிலளிக்கிறார்:
- திமுகவுக்கு இரட்டை நாக்கு, அவர்களுக்கு ஏற்றதுபோல் ஆளுநர் ஒத்துவராவிட்டால் பச்சோந்திபோல் விமர்சனம் செய்வார்கள். முரசொலியை திமுக காரர்களே படிக்க மாட்டார்கள் என்று கருணாநிதியே சொல்லியிருக்கிறார் என கூறினார்.
பாஜக தனித்துப் போட்டி - அண்ணாமலை
- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா தனித்துப் போட்டி
- தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து இடங்களிலும் பாஜக வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்
- அதிமுக தலைவர்கள் மீது எந்த ஒரு வருத்தமும் கிடையாது, தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்கிறது
- பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து இடங்களிலும் பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிடுகிறது
அதிமுக கூட்டணியிலிருந்த பாரதிய ஜனதா இடப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்துவந்த நிலையில் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
உள்ளாட்சியில் நல்லாட்சி - பாஜகவின் முடிவு
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளரைச் சந்தித்த அண்ணாமலை பேசுகையில், "தமிழ்நாட்டில் பாஜக வேகமாக வளர்ந்துவரும் கட்சி. தொண்டர்களின் குரலுக்கு செவிசாய்க்கும் விதமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா தனித்துப் போட்டியிடுகிறது.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் பாஜக வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். சற்று நேரத்தில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளோம். கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கும், வீடு வீடாக கட்சியை எடுத்துச் செல்வதற்கும் ஒரு வாய்ப்பு.
இல்லந்தோறும் தாமரை இருக்க வேண்டும், உள்ளாட்சியில் நல்லாட்சி மலர தொண்டர்களின் குரலுக்கு செவிசாய்க்கும் விதமே பாரதிய ஜனதாவின் முடிவு. அதிமுக தலைவர்கள் மீது எந்த ஒரு வருத்தமும் கிடையாது.
இல்லந்தோறும் தாமரை
இல்லந்தோறும் தாமரையைக் கொண்டு சேர்க்க இந்த முடிவை எடுத்துள்ளோம். நிறைய இடத்தில் நிற்க வேண்டும் என்பது நியாயமான ஆசை, அதிமுகவின் முடிவை ஏற்க முடியாத சூழ்நிலை உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிமுகவுடன் அகில இந்திய அளவில் தொடரும்.
அதிமுகவுடனான நல்லுறவு தொடர்கிறது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்தார்கள். பிரதமர் எடுத்த முக்கியமான முடிவுகளுக்கு அதிமுக தலைவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்துவந்தார்கள்.
அதிமுகவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடரும்... 2024 வரை, ஆனால் தற்போது உள்ளாட்சித் தேர்தலில்தான் தனித்துப் போட்டி. அதிமுகவிற்கான காலம் வரும்போது அவர்களுடன் கூட்டணியில் பாஜக இருக்கும். மத்திய அரசின் திட்டங்கள், திமுக அரசின் எட்டு மாத கால மக்கள் விரோத போக்குகளை மக்களிடம் எடுத்துரைக்கப் போகிறோம்.
- மக்கள் பணியை அடிமட்ட அளவில் தொடர்ந்து செய்துவருபவர்களுக்கும்
- எதிர்பார்ப்பில்லாமல் கட்சிக்கு உழைப்பவர்களுக்கும்
- மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும்