வருமானத்திற்கு அதிகமாக ரூ.27 கோடி சொத்து சேர்த்த விஜயபாஸ்கர்: எஃப்.ஐ.ஆரில் தகவல் - லஞ்ச ஒழிப்புத் துறை
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அசுர வளர்ச்சி கண்ட விஜயபாஸ்கர்
By
Published : Oct 18, 2021, 10:32 AM IST
|
Updated : Oct 18, 2021, 11:53 AM IST
சென்னை:சி. விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வந்த தகவலின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை செய்து முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்துள்ளனர்.
அதில், விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலகட்டமான 2013 முதல் 2021 வரை சட்டவிரோதமாகப் பல கோடி மதிப்பில் சொத்து குவித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா பெயரில் சொத்துகள் வாங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2016 வரை...
விஜயபாஸ்கர், அவரது குடும்பத்தினரின் பெயரில் ராசி புளூ மெட்டல்ஸ், கிரீன் லேண்ட் ஹை புரொமோட்டர்ஸ், ஐரிஸ் ஈகோ பவர் வென்சர், ராசி எண்டர்பிரைஸ், அன்யா எண்டர்பிரைஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பங்குதாரராகவும், அதில் சில நிறுவனங்களை நடத்திவருவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடன் விஜயபாஸ்கர்
குறிப்பாக, 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வேட்புமனு தாக்கலின்போது விஜயபாஸ்கர், ஆறு கோடியே 41 லட்சத்து 91 ஆயிரத்து 310 ரூபாய்க்கு சொத்துகள் வைத்திருப்பதாகத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டுக்குப் பின் வாங்கிய சொத்துகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
சொத்து
சொத்து மதிப்பு (ரூபாயில்)
7 லாரிகள், ஜேசிபி
6.58 கோடி
பி.எம்.டபள்யூ கார்
53 லட்சம்
தங்க நகைகள்
40 லட்சம்
சென்னை வீடு
14 கோடி
விவசாய நிலங்கள்
3.99 கோடி
பிற நிறுவனங்களில் முதலீடு
28 கோடி
2016-க்கு பிறகு...
இந்தக் குறிப்பிட்ட காலத்திற்குள் விஜயபாஸ்கர், அவரது மனைவி ஆகியோரின் பெயரில் வங்கி முதலீடுகள், நகைகள், விவசாய நிலம், வீடுகள், காப்பீடு உள்ளிட்டவை மூலமாக 57.77 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
மேலும் வருமான வரி, வங்கிக் கடன், வாழ்வாதாரம் என 34.51 கோடி ரூபாய் விஜயபாஸ்கர் செலவு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு 58 கோடியே 64 லட்சத்து 25 ஆயிரத்து 887 ரூபாய் எனக் காண்பிக்கப்பட்டுள்ளது. இதனைக் கணக்கிட்டுப் பார்த்ததில் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடியே 22 லட்சத்து 56 ஆயிரத்து 736 ரூபாய் சொத்து குவித்திருப்பது லஞ்ச ஒழிப்புத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
கல்வி நிறுவனங்களில் முதலீடா?
மேலும் முறைகேடு செய்த பணத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மதர் தெரெசா என்ற பெயரில் அறக்கட்டளை, கல்வி நிலையங்களை நடத்திவருவதாகச் சந்தேகம் எழுந்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் லஞ்ச ஒழிப்புத் துறை காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா
முன்னதாக, லஞ்ச ஒழிப்புத் துறையினர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயம்புத்தூர், திருச்சி, புதுக்கோட்டை உள்பட தமிழ்நாடு முழுவதும் 43 இடங்களில் இன்று (அக். 18) காலை முதல் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.