ஒவ்வொரு ஆண்டும் சட்டப்பேரவையில், பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் நாளன்று, பள்ளிக்கல்வித்துறையின் புள்ளி விவரங்கள் அடங்கிய ஆவண புத்தகம் வெளியிடப்பட்டு, அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்படுகிறது. அதன்படி ஜூலை 2ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றபோது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் புள்ளி விவர புத்தகம் வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டை விட இந்தாண்டு, அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை கடுமையாக சரிந்திருக்கும் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பள்ளிகளில், 4.15 லட்சம் மாணவர்கள் குறைந்த நிலையில், தனியார் பள்ளிகளில் 12.10 லட்சம் மாணவர்கள் அதிகரித்துள்ளனர். கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட புள்ளி விபரங்களை, இந்த ஆண்டு வெளியான புள்ளி விபரங்களுடன் ஒப்பிட்டுபார்த்தபோது, அரசு பள்ளிகள் அபாய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.
மாணவர்கள் எண்ணிக்கை புள்ளி விபரம்: 2017-18ஆம் கல்வியாண்டில் 37,358 அரசு பள்ளிகளில் 46,60,965 மாணவர்களும், 2018-19ஆம் கல்வியாண்டில் 37,459 அரசுப் பள்ளிகளில் 44,13,336 மாணவர்களும் பயின்று வருகின்றனர். இந்த ஆண்டு 2,47,629 மாணவர்கள் குறைந்துள்ளனர்.
2017-18ஆம் கல்வியாண்டில் 8,386 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 23,99,017 மாணவர்களும், 2018-19ஆம் கல்வியாண்டில் 8,357 அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 22,31,088 மாணவர்களும் படித்து வருகின்றனர். இதன்படி இந்தாண்டு 1,67,929 மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.