சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கான நிர்வாகப்பயிற்சி முகாமை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
பின்னர் பயிற்சிக்கான கையேட்டையும் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி, சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, நகர்ப்புற நிர்வாகத் துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, அரசியலில் இந்திய அளவில் பெரிய அளவுக்கு வந்தவர்கள் அனைவரும், உள்ளாட்சியில் பதவி வகித்தவர்கள்தான் என்றும், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சரியாக பணியாற்றினால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு திமுக அரசை யாராலும் அசைக்க முடியாது என்றும் தெரிவித்தார். உள்ளாட்சிப் பிரதிநிதிகளாக சிறப்பாகப் பணியாற்றினால் எதிர்காலத்தில் சட்டப்பேரவை உறுப்பினராக, அமைச்சராக வரும் வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டார்.