தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு - ETV Bharat

சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு வரும் திங்கள்கிழமைக்கு (ஜூலை 5) ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு ஜூலை 5இல் ஒத்திவைப்பு
சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு ஜூலை 5இல் ஒத்திவைப்பு

By

Published : Jul 1, 2021, 6:52 PM IST

சென்னை:செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுசில் ஹரி சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளியில் படித்த மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக, பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா சிபிசிஐடி காவல் துறையால் கைதுசெய்யப்பட்டார். மேலும் சிவசங்கர் பாபாவிற்கு உடந்தையாக இருந்த அவரது சிஷ்யர் சுஷ்மிதா, மாணவிகளை மூளைச்சலவை செய்ததாகக் கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டுவரும், பள்ளியின் ஆங்கில ஆசிரியை தீபா வெங்கடராமன், பள்ளி நிர்வாகி ஜானகி சீனிவாசன், பாரதி, திவ்யா பாலசுப்பிரமணியம், கனகாம்பிகை ஆகியோர் முன்பிணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதில், "2010-12ஆம் ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவிகள் அளித்த புகாரின்பேரில் சிபிசிஐடி காவல் துறையினர், போக்சோ மற்றும் பெண்களைத் துன்புறுத்துதல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவசங்கர் பாபா மீதான வழக்கில் தேவையில்லாமல் சிபிசிஐடி காவல் துறையினர் எங்களையும் சேர்த்துள்ளனர்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதி எம். தண்டபாணி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், பாதிக்கப்பட்ட மாணவிகள் விசாரணை நீதிமன்றத்தில் அளித்த ஒப்புதல் வாக்குமூலங்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்தார்.

மேலும், இந்த விவகாரத்தில் பதிவான மூன்று வழக்குகளின் விசாரணை தொடர்பாக தகவலை அறிக்கையாகத் தாக்கல்செய்யவுள்ளதாகவும், விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டும் என்றும் காவல் துறை தரப்பு வழக்கறிஞர் கோரிக்கைவைத்தார்.

இதனையடுத்து, மூன்று வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகள் உள்ளிட்ட வழக்கு தொடர்பான ஆவணங்களை மனுதாரர்கள் தரப்புக்கு வழங்க காவல் துறைக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு (ஜூலை 5) நீதிபதி ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details