பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ரவி தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்தக் காலத்தை வீட்டில் இருப்பவர்கள் மன அழுத்தமாகக் கருதாமல் தங்களை மேம்படுத்திக் கொள்ளும் ஒரு பொன்னான வாய்ப்பாகக் கருத வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
அதில், “நோய்த்தொற்று குறித்து கவலையடைந்து மன அழுத்தத்திற்கு செல்லாதீர்கள். அதை ஒரு பொன்னான வாய்ப்பாக மாற்றிக் கொள்ளுங்கள். குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுங்கள். அவர்களைப் புரிந்து கொள்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்த சிலரால் தற்போது வீட்டில் முடங்கி இருப்பது கடினமாக இருக்கும், ஆனால் விஞ்ஞானப்பூர்வமாக வருடத்தில் ஒரு சில வாரங்கள் உடற்பயிற்சிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் எனவே அதுவும் உங்களுக்கு நல்லதுதான்.
இந்த காலக்கட்டத்தில் நம்முடைய பொழுதுபோக்கை வளர்த்துக் கொள்ள இணையதளத்தில் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. வழக்கமான டிவிகளில் இருந்து இணையதளத்தில் வெளிவரும் நாடகங்கள் மற்றும் திரைப்படங்களைக் காணலாம்.
படிக்கும் மாணவர்கள் இணையதளத்தில் கற்றுக் கொள்வதற்கு பல இணையதள சேவைகள் உள்ளன. அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீட் தேர்வு, ஐஐடி நுழைவுத் தேர்வு, என அடுத்து வரவுள்ள தேர்வுகளுக்கு தயாராகுங்கள். யுபிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களும் இணையதளத்திலேயே குரூப் ஸ்டடி செய்வதற்கு வசதிகள் உள்ளன. அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வேறுவகையில் எவ்வாறு தயாராகலாம் என்பதையும் யோசியுங்கள்.
இந்த நோய்த் தொற்று காரணமாக வீட்டில் இருப்பது நம்மை நாமே புரிந்துக்கொள்ள உதவும். நமது நடவடிக்கையை நாமே உற்று கண்காணித்து அதில் மாற்றத்தை ஏற்படுத்தி இந்த ஊரடங்கு உத்தரவு முடிந்து வெளிவரும்போது புத்துணர்ச்சி பெற்ற மனிதர்களாக வெளியே வரவேண்டும்” எனப் பேசியுள்ளார்.