தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, “234 தொகுதிகளிலும் 1,38,497 தபால் வாக்குகள் செலுத்தப்படவுள்ளன. இதில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 11,658 வாக்குகளும், குறைந்த பட்சமாக தேனி மாவட்டத்தில் 562 தபால் வாக்குகளும் உள்ளன. எந்தெந்த தேதியில் தபால் வாக்குகளைப் பெறுவது என அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு செய்வார்.
அதிக புகார்கள் வந்துள்ள கரூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் தொகுதிகளுக்கு, கூடுதல் தேர்தல் செலவின பார்வையாளராக தீபக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக வருமானவரித்துறையிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் கேமராக்கள், கண்காணிப்பு குழுக்கள், பறக்கும் படையினர் அமைக்கப்படும். இதுவரை தேர்தல் பறக்கும் படையால் மொத்தம் 278.73 கோடிக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் தங்கம் 131.06 கோடி, வெள்ளி 1.78 கோடி, பணம் 121.98 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை அவற்றை உரியவர்கள் யாரும் பெற்றுக் கொள்ளவில்லை.