சென்னையில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான படுக்கை உள்ளிட்ட வசதிகளும் மருத்துவமனைகளில் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. நோயாளிகள் ஆம்புலன்ஸ் எனப்படும் அவசர ஊர்தி மூலம் மருத்துவமனையிலிருந்து தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஏற்கனவே வேறு மாவட்டங்களில் பணிபுரிந்த மருத்துவர்கள் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், செவிலியர்கள், ஆய்வக உதவியாளர்களை தேர்வு செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நோயாளிகள் அதிகரிப்பால் அவசர ஊர்திகளின் தேவையும் அதிகரித்துள்ளது.