சென்னை:நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசி, சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.
சிறையில் மீரா மிதுன்
புகாரின் பேரில் மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 11ஆம் தேதி மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி மீரா மீதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை காவல் துறையினர் கடந்த 14ஆம் தேதி கைது செய்தனர். தற்போது புழல் சிறையிலுள்ள மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மீரா மிதுனின் மனுவில், “என்னைப் பற்றி அவதூறாக செய்தி பரப்பியதால் மன உளைச்சலில் இருந்தேன். இதனால், அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்று பதிவிட்டேன். அதில், வாய் தவறி பட்டியலின சமுதாயத்தை பற்றி பேசிவிட்டேன். நான் பேசியது தவறு என தெரிந்ததும், நான் பேசியது தவறு என குறிப்பிட்டேன்.
ஜாமீன் கோரி மனு
ஆனால், நான் சொல்லாத வார்த்தைகளை பேசியதாக புகார் அளித்துள்ளனர். பட்டியலின மக்களோடு நான் நட்புடன் இருந்து வருகிறேன். பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில், என்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதால் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கோரியுள்ளார்.
மேலும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாகவும், சாட்சிகளை கலைக்க மாட்டேன் எனவும் மனுவில் உத்தரவாதம் அளித்துள்ளார். இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நாளை (ஆகஸ்ட் 19) விசாரணைக்கு வரவுள்ளது.
இதையும் படிங்க: ’சோறே போடல’ - மீரா மிதுன் புலம்பல்