தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'மாதவிடாய் காலத்திலும் மிருகத்தனமாக நடந்து கொள்வார்' - முன்னாள் அதிமுக அமைச்சர் மீது நடிகை புகார் - Former Ramanathapuram MLA Manikandan

"மாதவிடாய் காலங்களில் கூட, மிருகத்தனமாக என்னை பலவந்தப்படுத்தி உடலுறவு கொண்டார். மூன்று முறை நான் கருவுற்றேன். மூன்று முறையும் என்னை மூளை சலவை செய்து கருக்கலைப்பு செய்யவைத்தார். அவரின் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி கொலை மிரட்டல் விடுக்கிறார்" என்று நடிகை சாந்தினி முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

முன்னாள் அதிமுக அமைச்சர் மீது சாந்தினி புகார்
முன்னாள் அதிமுக அமைச்சர் மீது சாந்தினி புகார்

By

Published : May 28, 2021, 5:09 PM IST

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது திரைப்பட துணை நடிகை சாந்தினி இன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தனது வழக்கறிஞர்களுடன் வந்து புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், "நான் மலேசிய குடியுரிமை பெற்ற திருமணம் ஆகாத பெண். தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளேன். 'நாடோடிகள்' உள்பட 5 படங்களில் நடித்துள்ளேன். மலேசிய சுற்றுலா தூதரகத்தில் பணிபுரிந்து வந்தபோது, சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பணி நிமித்தமாக இந்தியா வந்து செல்வது வழக்கம்.

'பரணி' மூலம் தூது அனுப்பிய அமைச்சர்:

கடந்த 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் அதிமுக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பத்துறை முன்னாள் அமைச்சரும் முன்னாள் ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினருமான மணிகண்டன் சுற்றுலா வளர்ச்சித்துறை சம்பந்தமாக, என்னைப் பார்க்க விரும்புவதாக எனக்குத் தெரிந்த நண்பர் பரணி மூலம், என்னிடம் தகவல்களை அனுப்பினார். முன்னாள் அமைச்சர் மணிகண்டனை அவருடைய அமைச்சர் இல்லத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி நேரில் சென்று சந்தித்தேன்.

மணிகண்டன், சாந்தினி

அன்றைய தினம் சுற்றுலாத்துறை சம்பந்தமாக என்னிடம் பேசிய முன்னாள் அமைச்சர், மலேசியாவில் தொழில் முதலீடு செய்யப்போவதாகவும்; அந்த தொழில் முதலீடு தொடர்பாக நாம் இருவரும் கலந்துபேச வேண்டும் என்றும் கூறி, தொடர்ந்து மொபைலில் பேசுமாறு, என்னிடம் அறிவுறுத்தி அனுப்பினார். மேலும் என்னிடம் தனிப்பட்ட முறையில் பேச ஆரம்பித்தார். நான் மிகவும் அழகாக இருப்பதாகவும், அவருக்கு என்னை மிகவும் பிடித்துவிட்டதாகவும், ஒரு கட்டத்தில் என்னைத் திருமணம் செய்து கொள்வதாகவும் என்னிடம் கூறினார்.

'அமைச்சரின் வலையில் சிக்கினேன்'

அவர் குடும்ப வாழ்வில், அவர் மனைவியால் எந்த சந்தோஷமும் இல்லை என்றும்; அவருடைய மனைவி மிகவும் கொடுமைக்காரி என்றும், உன்னை போன்ற ஒரு அழகான பெண், என் இல்லற வாழ்வில் இருந்தால் என்னுடைய வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கும் எனவும் ஆசை வார்த்தைக் கூறி நம்ப வைத்தார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் என்னைக் காதலிப்பதாகவும் தெரிவித்தார். நான் அவருடைய காதலை ஏற்க மறுத்தபோது, அவர் என்னை சட்டப்படி திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார். முதலில் ஏற்க மறுத்த நான், பின் அவருடைய வார்த்தைகள் அனைத்தையும் நம்பி, அவர் என்னை திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில், இருவரும் ஒரே வீட்டில் கணவன் மனைவியாக வாடகைக்கு வீடு எடுத்து வாழ்ந்து வந்தோம்.

நடிகை சாந்தினி செய்தியாளர் சந்திப்பு

சட்டப்பேரவைக்குள் நடமாட்டம்;

அவர் சென்னையில் இருக்கும்போது இரவு என்னுடன்தான் தங்குவார். நான் எங்கு வெளியில் செல்ல வேண்டும் என்றாலும் அமைச்சருடைய வாகனத்தை (TN-65 AL 4777) தான் பயன்படுத்துவேன். கணவன் மனைவியாக ராமேஸ்வரம், பாண்டிச்சேரி, திருநெல்வேலி, டெல்லி தமிழ்நாடு இல்லம் எனப் பல இடங்களுக்குச் சென்று வந்துள்ளோம். மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு, அமைச்சர் அவருடைய உரையை சட்டப்பேரவையில் நிகழ்த்தியபோது, நான் அவருடைய சட்டப்பேரவை உரையை மனைவி என்ற முறையில் பார்வையிட அனுமதிக்கப்பட்டிருந்தேன். மேலும் நான் நாளடைவில், அவரை முறைப்படி திருமணம் செய்ய வற்புறுத்தியபோது, அவர் அவருடைய மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டு, என்னை முறைப்படி திருமணம் செய்வதாகக் கூறினார்.

மூளைச் சலவையால் 3 முறை கருக்கலைப்பு:

அவர் என் வீட்டிற்கு வந்து தங்கி சென்றதற்கான, அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளது. மேலும் நாங்கள் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்ததன் பலனாக நான் மூன்று முறை கருவுற்றேன். முறைப்படி திருமணம் செய்து கொண்ட பிறகு, நாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று என்னை மூளைச்சலவை செய்து, மூன்று முறையும் அவருடைய நெருங்கிய டாக்டரின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தி கட்டாயத்தின்பேரில் கருக்கலைப்பு செய்யவைத்தார்.

நடிகை சாந்தினி பேட்டி

கடந்த 2019ஆம் ஆண்டு மூன்றாம் முறை கருவுற்றபோது அவர் வீட்டிற்குச் சென்று திருமணம் செய்ய வற்புறுத்தினேன். ஆனால், மணிகண்டன் மறுத்ததால் என் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றேன். பலமுறை உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன்.

'மிருகத்தனமாக நடந்து கொண்டார் '

மாதவிடாய் காலத்தில் என் வீட்டில் தங்கும்போது, எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நேரத்தில் கூட மிருகத்தனமாக, என்னை பலவந்தப்படுத்தி வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்டார்.என்னை திருமணம் செய்ய வேண்டி 2019ஆம் ஆண்டு அவரிடம் கேட்டபோது, இரண்டு முறை அடித்து துன்புறுத்தினார். இதனால் கண்ணில் காயம் ஏற்பட்டது.

2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் என்னைத் திருமணம் செய்வதாகக் கூறினார். அச்சமயம் கரோனா வைரஸ் நோயால் உலகம் முழுவதும் ஊரடங்கு போட்டதால், அவர் அவருடைய சொந்த ஊர் சென்று திரும்பி சென்னைக்கு வர முடியவில்லை என்ற காரணத்தை என்னிடம் கூறினார். நானும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நிலை சரியில்லாத என் தாய், தந்தையரைப் பார்க்க மலேசியா சென்று, டிசம்பர் மாதம் மீண்டும் தமிழ்நாடு வந்தேன். நான் திரும்பி வந்தவுடன், என்னை வீட்டிற்கு வந்து பார்த்து சமாதானம் செய்து 2021ஆம் ஆண்டு எப்படியும் திருமணம் செய்வதாகக் கூறி, மீண்டும் என்னுடன் வாழ்ந்து வந்தார்.

அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி கொலை மிரட்டல்

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி வரை, என்னுடன் வாழ்ந்து வந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அவருடைய சொந்த ஊருக்குச் சென்ற பிறகு, என்னை திடீரென்று மிரட்ட ஆரம்பித்தார். நான் ஏன் இவ்வாறு திடீரென்று மிரட்டுகின்றீர்கள் என்று கேட்டபோது, ஒழுங்காக நீ உன் சொந்த நாட்டிற்குச் சென்றுவிடு; இல்லையென்றால் உனக்குத் தெரியாமல் எடுத்த அனைத்து அரை நிர்வாணப் படங்களையும் சமூக வலைதளங்களில் விட்டுவிடுவேன் என்று மிரட்டினார்.

குளிக்கும்போது எனக்குத் தெரியாமல் எடுத்த ஆடையில்லாத போட்டோவை, எனக்கு டெலிகிராம் மூலம் அனுப்பினார். உடனே, நான் அந்த போட்டோவை டெலிட் (delete) செய்ய வற்புறுத்தினேன்.

கொலை மிரட்டல் விடுத்தார். காசோலை ஒன்று தெரியாமல் என்னிடம் எடுத்து வைத்துக் கொண்டு, அதை வைத்து, என் மீது மோசடி வழக்குப்பதிவு செய்வதாக மிரட்டுகிறார். அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, என் மீது பல பொய் வழக்குகளைப் போட்டு, என் வாழ்க்கையை சீரழித்துவிடுவதாக மிரட்டிகிறார். ரவுடிகளை வைத்து என்னைக் கொலை செய்து விடுவதாகவும்; எனக்குத் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். சென்னை காவல் ஆணையர் என் மனுவை விசாரணை செய்து மணிகண்டன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பரணி என்பவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details