முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் விஜயகுமார் எழுதிய கடிதத்தில், "சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஈக்காட்டுத்தாங்கல், கலைமகள் நகர் பகுதியில் நான் பல வருடங்களாக குடியிருந்து வருகிறேன். கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம், செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட பொழுது, எங்களது பகுதியிலிருந்து அடையாறு வரை பல ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன. உயிர் சேதமும் ஏற்பட்டது.
இந்த ஆண்டும் செம்பரம்பாக்கம் ஏரியல் நீர் மட்டம் 21 அடியைத் தாண்டி உயர்ந்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமை நீடித்தால் 2015ம் ஆண்டைப் போல பெரும் பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும்.
ஆகவே, தாங்கள் கவனத்தில் இதைக் கொண்டு முன்னேற்பாடாக ஏரியில் உள்ள தண்ணீரை அளவுடன் திறந்துவிட உத்தரவு பிறப்பித்ததால், கரையோரம் இருப்பவர்களுக்கு உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்படாமல் தடுக்க இயலும்.
எனவே தயவுகூர்ந்து இதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டுமென்று தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். தங்களால் இதை செய்ய இயலும் என நான் ஒருமனதாக நம்புகிறேன்.
கரோனா எனும் கொடு நோயிலிருந்து நம் தமிழ்நாட்டு மக்களை எவ்வண்ணம் காப்பாற்றிக் கொண்டிருக்கிறீர்களோ, அவ்வண்ணமே கரையோரம் வசிக்கும் மக்களையும் காப்பாற்ற வேண்டுமென்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.