சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் 'பீஸ்ட்' திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படம், தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாவதை முன்னிட்டு இப்படத்தைக் காண விஜய் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இதனிடையே பீஸ்ட் திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒருபகுதியாக நேற்று (ஏப்.10) இயக்குனர் நெல்சன் திலிப்குமாருக்கு, நடிகர் விஜய் மனம் திறந்து பேட்டியளித்தார். இந்தப் பேட்டி தனியார் தொலைக்காட்சியில் ஔிபரப்பானது. வழக்கமாக விஜய் திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக ஒவ்வொரு முறையும் இசை வெளியீட்டு விழாவில் விஜய் தனது ரசிகர்களுக்கும் அவரது நண்பா, நண்பிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும் தனது ட்ரேட்மார்க் பாணியில் அன்றைய சமூக சூழ்நிலையை விளக்கும் விதமாக ஒரு குட்டி கதையை சொல்வார்.
இந்நிலையில், பீஸ்ட் திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெறாத நிலையில், அதற்கு ஈடுகொடுக்க ஒரு புதுமையான முயற்சி மேற்கொள்பட்டது. அதாவது, 'பீஸ்ட்' படத்தின் இயக்குநர் நெல்சன் தொகுப்பாளராக களமிறங்கி 'விஜய்யுடன் நேருக்கு நேர்' என்ற தலைப்பில் நடிகர் விஜய்யிடம் சிறப்புப் பேட்டி எடுத்துள்ளார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் பேட்டியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.