தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'சமரசம் செய்துகொள்ளாத திராவிடச் சிந்தனையாளர் புலமைப்பித்தன்'

சமரசம் செய்துகொள்ளாத திராவிடச் சிந்தனையாளர் புலவர் புலமைப்பித்தன் என நடிகர் சிவகுமார் தனது அஞ்சலி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகுமார்
நடிகர் சிவகுமார்

By

Published : Sep 10, 2021, 8:45 AM IST

சென்னை:மறைந்த புலவர் புலமைப்பித்தனுக்கு நடிகர் சிவகுமார் அஞ்சலி செலுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “புலவர் புலமைப்பித்தன் கோவை மாவட்டம் சூலூரில், எனக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே பள்ளி இறுதிப் படிப்பை முடித்தவர். முறையாகத் தமிழ் படித்து புலவரானவர்.

ஆலைத் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கியவர். ஆசிரியர் பணியினைத் தொடர்ந்து எம்ஜிஆரின் ‘குடியிருந்த கோயில்’ படத்திற்கு, ‘நான் யார் நான் யார் நீ யார்’ பாடல் எழுதி அதன்மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். இலக்கியத் தரமுள்ள பாடல்கள் எழுதுவதில் தனித்துவமாக விளங்கினார்.

பாடல்களால் பெருமைபெற்ற படங்கள்

என் படங்கள் பல அவரது பாடல்களால் பெருமை பெற்றன. ‘ஆகாயம் பூமி என்றும் ஒன்றா? நீ அந்த வானம் நான் இந்த பூமி
ஒன்றென்று யார் சொல்லுவார்’ என்று ‘சாமந்திப்பூ’ படத்திற்குப் பாடல் எழுதிக் கொடுத்தார். நாயகி சோபாவை நினைத்து படத்தில் நான் பாடிய பாடல்.

எனது 100ஆவது படத்தின் உயிராக மக்கள் கொண்டாடிய பாடல் ‘உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி, பச்சமல பக்கத்திலே மேயுதின்னு சொன்னாங்க’ 1979ஆம் ஆண்டின் மிகச்சிறந்த பாடலுக்காகத் தமிழ்நாடு அரசு விருது பெற்றது. இளையராஜாவும், எஸ்.பி.பி.யும் அவர் வரிகளுக்கு உயிர் கொடுத்தனர்.

பெரியாரின் முதல் வரிசை சீடர்

எம்ஜிஆர் அரசில் அரசவைக் கவிஞராகவும், மேல்சபைத் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். தமிழீழப் போராளி பிரபாகரனுக்குத் தொடக்க காலத்தில் தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்தவர். திருமணத்திற்கு முன்னரே தன் புதல்வி தீ விபத்தில் அகால மரணமடைந்தபோதும், தன் மகன் விபத்தில் அகப்பட்டு ‘கோமா’ நிலையில் 11 மாதங்கள் இருந்து இறந்தபோதும் கலங்காத நெஞ்சுரம் மிக்கவர்.

சமரசம் செய்துகொள்ளாத திராவிடச் சிந்தனையாளர், பெரியாரின் முதல் வரிசை சீடர். அவரது இழப்பு கலை இலக்கிய உலகுக்கு ஈடுசெய்ய முடியாத ஒன்று. அவரைத் தன்னுடைய 75ஆவது வயதில் இழந்திருக்கும் அவரது துணைவியாருக்கும், மருமகளுக்கும், பேரன் திலீபனுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: புலமைப்பித்தன் மறைவால் வாடுவோருக்கு அனுதாபங்கள் - நடிகர் சத்யராஜ்

ABOUT THE AUTHOR

...view details