தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

போலி ஆர்யா இளம்பெண்களிடம் மோசடி - actor arya cheating with woman

நடிகர் ஆர்யாவின் புகைப்படத்தை வைத்து ஃபேஸ்புக் கணக்கைத் தொடங்கி, பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரூ.70 லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

நடிகர் ஆர்யா மோசடி வழக்கு
நடிகர் ஆர்யா மோசடி வழக்கு

By

Published : Aug 25, 2021, 7:50 AM IST

Updated : Sep 2, 2021, 7:10 PM IST

சென்னை:இலங்கையைச் சேர்ந்த இளம்பெண் விட்ஜா, ஜெர்மனி நாட்டில் வசித்துவருகிறார். இவர், கடந்த பிப்ரவரி மாதம் குடியரசுத் தலைவர் அலுவலகம், பிரதமர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், நடிகர் ஆர்யா தன்னுடன் சமூக வலைதளம் மூலமாகப் பழகி, திருமணம் செய்துகொள்வதாக நம்பவைத்து 70 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மூலமாகப் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவலர்கள் விசாரித்துவந்தனர். நடிகர் ஆர்யாவிடம் ஆகஸ்ட் 10ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு அலுவலர்கள் விசாரணை நடத்தினர். அத்துடன் அவரது ஸ்மார்ட்போன் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில், விட்ஜாவின் ஸ்மார்ட்போனுக்கும், ஆர்யாவின் ஸ்மார்ட்போனுக்கும் இடையே எவ்விதத் தகவல்களும் பரிமாறிக்கொள்ளப்படவில்லை.

இந்த வழக்கில் ஆர்யாவிற்குத் தொடர்பில்லை என்பதும் தெரியவந்தது. அதையடுத்து, பணப்பரிவர்த்தனை செய்த வங்கிக் கணக்கு, IP முகவரியை வைத்து விசாரணை தொடர்ந்தது. இதில், நேற்று (ஆகஸ்ட் 24) சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த முகமது அர்மான், அவரது மைத்துனர் முகமது ஹூசைனி இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

ஆர்யா குரலில் மோசடி

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முகமது அர்மான் நடிகர் ஆர்யாவின் ரசிகர் என்பதும், அவரது புகைப்படத்தை வைத்து ஃபேஸ்புக்கில் கணக்குத் தொடங்கி பல பெண்களிடம் பண மோசடியில் ஈடுபட்டுவந்ததும் தெரியவந்தது. அத்துடன், பெண்களை காதல் வலையில் விழவைத்து, ஆர்யாவைப்போல் குரலை மாற்றிப்பேசி நம்பவைத்துவந்ததும் தெரியவந்துள்ளது.

குறிப்பாக குரலை மாற்றுவதற்காக, இவர் பல்வேறு ஸ்மார்ட்போன் செயலிகளைப் பயன்படுத்தி வந்ததும், இவருக்கு உடந்தையாக முகமது ஹூசைனி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல, ஜெர்மனி பெண் விட்ஜாவிடமும், ஆர்யா குரலில் பேசி திருமணம் செய்துகொள்வதாக நம்பவைத்து, அவரிடமிருந்து 70 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர்.

பணத்தைத் திருப்பிக் கேட்கும்போது, ஆர்யாவின் தாயார்போல பேசியும் மிரட்டியும் வந்துள்ளனர். இவர்களிடமிருந்து, இரண்டு செல்போன்கள், ஒரு மடிக்கணினி, ஒரு ஐபேட், முக்கிய ஆவணங்கள் பறிமுதல்செய்யப்பட்டன. இதையடுத்து இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அவர்களை செப்டம்பர் 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையேநடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், "என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில், உண்மையான குற்றவாளியைக் கண்டறிந்து கைதுசெய்ததற்காக சென்னை காவல் துறைக்கு நன்றி. இந்த வழக்கு எதிர்பார்க்காத அதிர்ச்சியைத் தந்தது. என்னை நம்பிய அனைவருக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:பெண்ணை ஏமாற்றிய வழக்கு: ஆர்யா போல் பேசியதாக இருவர் கைது!

Last Updated : Sep 2, 2021, 7:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details