சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப்பள்ளிகளிலும் விடுதிகளிலும் முறையான சான்று பெற்று சுகாதாரமான முறையில் நடத்தவில்லை என்றால், துறைரீதியாக அந்த விடுதிகளிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை - ராயப்பேட்டையில் உள்ள மோனகன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள விடுதியில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மாநிலத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, உறுப்பினர்கள் சரண்யா ஜெயக்குமார், துரைராஜ் , மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மார்ஸ் உள்ளிட்ட குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது விடுதியில் உள்ள மாணவிகளிடம் அவர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்தனர். மேலும் விடுதியில் உள்ள அடிப்படை வசதிகள் எந்தளவிற்கு உள்ளது என்பதையும், உணவு தயாரிக்கும் இடம், மாணவிகளின் கழிப்பறை உள்ளிட்டவற்றையும் ஆய்வு மேற்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மாநிலத்தலைவர் சரஸ்வதி ரங்கசாமி கூறும்போது, “கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சம்பவத்தைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இன்று சென்னையில் உள்ள மோகனன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் ஆய்வு மேற்கொண்டோம். இங்கு மாணவிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.
56 மாணவிகள் தங்கும் விடுதியில் மாணவிகளுக்குப் போதுமான குடிநீர் வசதி இல்லை. தரமற்ற முறையில் விடுதி இருக்கிறது. விடுதியில் உள்ள மாணவிகளை சிலர் மிரட்டுவதாகப் புகார் தெரிவிக்கின்றனர். விடுதியில் உள்ள குறைகளை வெளியே தெரிவிக்கக்கூடாது என்று அச்சுறுத்துவதாகவும் மாணவிகள் எங்களிடம் தெரிவித்தனர்.