சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று (ஏப்.29) கேள்வி நேரத்தின் போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, "கிராம மக்கள் பயன்பெற வேண்டும் என்ற வகையில் மினி பேருந்துகளை கருணாநிதி தொடங்கி வைத்த திட்டம் தனியாருக்கு வழங்கப்பட்டது. ஆனால் டீசல் விலை உயர்வு போன்ற காரணங்களால் மினி பேருந்துகள் இயங்கவில்லை.
மினி பேருந்துகள் வழித்தடத்தை 4 கிலோ மீட்டர் நீட்டித்து தர வேண்டும். அத்தனை மினி பேருந்துகள் ஓட அரசு நடவடிக்கை எடுக்குமா" என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், "1981ஆம் ஆண்டு கருணாநிதி கொண்டு வந்த புரட்சிகரமான திட்டம் மினி பேருந்து திட்டம். பேருந்துகளை பார்க்காத கிராமங்களுக்கு மினி பேருந்து திட்டம் தான் வரப்பிரசாதமாக அமைந்தது.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக மினி பேருந்துகளின் உரிமையாளர்கள் கோரிக்கை கவனிக்கப்படாமல் உள்ளது. அவர்களிடம் ஏற்கனவே பேசியுள்ளோம். சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்த உடன் மீண்டும் அவர்களுடன் பேசி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். இதனைத் தொடர்ந்து கேள்வி நேரத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் ஜவாஹிருல்லா, "பாபநாசம் தொகுதியில் மினி பேருந்துகள் வசதியின்மையால் பள்ளி மாணவர்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், "தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. எனவே, அரசுப் பேருந்துகளை கூடுதலாக இயக்க தேவை உள்ளது என கோரிக்கை எழுந்துள்ளது. விரைவில் இது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க:கைத்தறித் துறை சார்பில் ரூ.6.96 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்